யாழ்ப்பாணத்தில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் , ஐஸ் போதைப்பொருளுடன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்னர் ஒரு இலட்சத்து 05 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டிருந்தன.
குறித்த களவு சம்பவம் தொடர்பில் , உணவக உரிமையாளர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில் , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து சந்தேகநபர்களை அடையாளம் கண்டிருந்த போதிலும் , அவர்கள் தலைமறைவாகி இருந்தனர்.
இந்நிலையில் , இன்றைய தினம் பொலிஸ் புலனாய்வு துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , தலைமறைவாகி இருந்த இருவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் சோதனைக்கு உட்படுத்திய போது அவர்களது உடைமையில் இருந்து 160 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






No comments