சுற்றுலா அல்லது யாத்திரை பயணங்களில் இருக்கும் இடத்தை முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம் என போலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப். யூ. வுட்லர் எச்சரித்துள்ளார்
பத்தரமுல்லையில் உள்ள போலீசார் ஊடகப் பிரிவு கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாம் அனைவரும் பண்டிகைக் காலத்தை நோக்கி நகர்கிறோம். குறிப்பாக உல்லாசப் பயணங்கள், யாத்திரைகள் மற்றும் பல்வேறு சுற்றுப் பயணங்களுக்காக நாம் கிராமத்தை விட்டு புறப்படுகிறோம்.
இந்த நாட்களில் உங்களது பயண இலக்குகள் குறித்து உங்களது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தின் மூலமாகவோ அல்லது சமூக ஊடகங்கள் மூலமாகவோ நீங்களே அறிவிப்பதை நாம் அவதானித்துள்ளோம்.
நீங்கள் நுவரெலியாவில் இருக்கிறீர்கள், நீங்கள் காலியில் இருக்கிறீர்கள் அல்லது நீங்கள் கதிர்காமத்தில் இருக்கிறீர்கள் என்பது போன்ற தகவல்களை செல்பி புகைப்படங்கள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கும் முறையை நீங்களே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். இது பொருத்தமானதல்ல.
உங்களைத் பின்தொடரும் ஒரு குற்றவாளிக்கோ அல்லது உங்களைப் பற்றியோ, உங்கள் வீட்டைப் பற்றியோ நோட்டமிட்டுக் கொண்டிருக்கும் ஒருவருக்கோ இது மிகவும் சாதகமான விடயமாக அமையலாம்.
எனவே, நீங்கள் இருக்கும் இடத்தைப் பற்றி வேறு எவரும் தெரிந்து கொள்ளாத வகையில் நடப்பதால் அது நன்மையை ஏற்படுத்துவதாக அமையும்.
அதேபோல், நீங்கள் இந்தப் பயணத்திற்காகப் பயன்படுத்தும் வாகனம், அதன் சாரதி என்பனவற்றில் நீங்கள் திருப்தி அடைவதை முதலில் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.







No comments