Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தமிழர்களுக்குச் சஜித் துரோகமிழைத்துள்ளார் - சிறிதரன் எம்.பி கடும் கவலையில்


திருகோணமலை புத்தர் சிலை விடயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறிய கருத்தை மீளப்பெற வேண்டும். தமிழ் மக்களிடம் அவர் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார் 

மேலும் தெரிவிக்கையில், 

திருகோணமலையில் புத்தர் சிலை ஒன்று பிரதிஸ்டை செய்த விவகாரம் தமிழ் மக்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. வரலாற்று ரீதியாக பார்த்தால் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்கள் எவரும் அரச அதிபர்களாகப் பதவி வகிக்கவில்லை.

திருகோணமலை மாவட்டத்தில் தமிழரின் இனப் பரம்பலை இல்லாதொழிப்பதற்குத் தொடர்ச்சியாகச் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன. 

இதனடிப்படையில் தான் அண்மையில் புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது. அது இன்று இனவாதப் பூதமாக வெளிவந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன  பிக்குகளைக் கொண்டு தமிழ் மக்களுக்கு எதிராக அரசியல் செய்தார். இந்த அரசாங்கமும் அதே வழியிலேயே பயணிக்கின்றது.

திருகோணமலை பகுதியில் சட்டவிரோதமான  முறையில் புத்தர் சிலை வைக்கப்படுகின்றது. அது பொலிஸாரால் அகற்றப்படுகின்றது. பின்னர் பொலிஸாரால் அதே இடத்தில் வைக்கப்படுகின்றது. 

இந்தச் சம்பவம் குறித்து சபையில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இந்தச் சம்பவத்தை தேசிய பிரச்சினையாகப் பார்க்க வேண்டும், புத்தர் சிலையை அதே இடத்தில் வைக்க வேண்டும் என்று ஆக்ரோஷமாகக் குறிப்பிட்டது ஆச்சரியமாக உள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் வெற்றி  பெற்றால் அனைத்துப்  பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்று  எண்ணி தமிழ் மக்கள் அவருக்கு வாக்களித்தார்கள். எனவே, சஜித் பிரேமதாஸ இந்தக் கருத்தை மீளப்பெற வேண்டும். தமிழ் மக்களிடம் அவர் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்.

தமிழர்களுக்குச் சஜித் துரோகமிழைத்துள்ளார். அவர் பகிரங்க மன்னிப்புக்   கோரினால்தான் அது இந்த நாட்டில் ஒரு நீதியாக அமையும்.

இந்த நாட்டில் மதத்தை முன்னிலைப்படுத்தித்தான் காலம்காலமாக பிரச்சினைகள் தோற்றம் பெற்றன. திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில்  இராணுவத்தின் ஒத்துழைப்புடன் 30 விகாரைகள் கட்டப்படுகின்றன. 

திரியாய் பகுதியில் இரண்டு சிங்களவர்களுக்காக ஒரு விகாரை கட்டப்படுகின்றது. கிழக்கில் பல இடங்களில் காணிகள் சட்டவிரோதமான முறையில் கைப்பற்றப்பட்டு விகாரைகள் கட்டப்படுகின்றன. அரசாங்கம் இதனைத் தடுக்க வேண்டும். இல்லையேல் இந்த நாட்டில் நல்லிணக்கம் இல்லதொழியும். இது மிகவும் அபாயகரமானது.  

ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்பின் போது திருகோணமலை விவகாரம் பற்றி பேசினோம். அவரும் ஒருசில விடயங்களை ஏற்றுக்கொண்டார். உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம்  தொடர்பில் ஜனாதிபதி சபையில் ஆற்றிய உரை நம்பிக்கையளித்துள்ளது. 

இருப்பினும் சகல விடயங்களிலும் நம்பிக்கைகொள்ள முடியாது. இந்த விவகாரத்தில்  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்போது ஏன் யாழ். தையிட்டி விகாரை குறித்து அவதானம் செலுத்தவில்லை என்று கேள்வி எழுகின்றது. ஆகவே சிலைகளை அடிப்படையாகக் கொண்டு முரண்பாடுகள் திட்டமிட்ட வகையில் தோற்றுவிக்கப்படுகின்றன. அரசாங்கம் இதனைத் தடுத்தேயாக வேண்டும். - என்றார்

No comments