கடல் வழியாகக் கொண்டுவரப்பட்டு நிலப்பகுதிக்கு மாற்றப்பட்ட 300 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் 8 பேரை மேல் மாகாண வடக்குக் குற்றப் பிரிவினர் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை கைது செய்தனர்.
கிரிந்த, அந்தகலவெல்ல கடற்கரைப் பகுதியில் நடத்தப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திஸ்ஸமஹாராம பகுதிக்கு கடல் மார்க்கமாக போதைப்பொருள் கொண்டு வரப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்தது.
தகவலின் அடிப்படையில் ஆழ்கடலில் இருந்து பலநாள் மீன்பிடிப் படகு ஒன்றில் கொண்டுவரப்பட்ட போதைப்பொருள், சிறிய படகு ஒன்றுக்கு மாற்றப்பட்டமை தெரியவந்துள்ளது.
சிறிய படகில் கடற்கரையை நோக்கி கொண்டு வரப்பட்ட போதைப்பொருட்கள், கயிறு ஒன்றின் உதவியுடன் கடலில் மிதக்கவிடப்பட்ட நிலையில், அவற்றை எடுத்துச் செல்ல வந்த 7 பேரை கடற்கரையில் வைத்துப் பொலிஸாரால் முதலில் கைது செய்யப்பட்டனர்.
அதனை தொடர்ந்து கடலில் மிதந்து கொண்டிருந்த போதைப்பொருள் அடங்கிய 19 பொதிகளும் கரைக்குக் கொண்டு வரப்பட்டு கிரிந்த பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன.
அவை சுமார் 345 கிலோகிராம் எடையுள்ள ஹெரோயின் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
கிரிந்த பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்ட 7 சந்தேகநபர்களைத் தவிர, பின்னர் மற்றொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 6 வாகனங்களையும் பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர்






No comments