Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வடக்கு கிழக்குக்காவது மாகாண சபை தேர்தல் என்பது நடத்தப்பட வேண்டும்.


வடக்கு கிழக்கில் உள்ள மாகாணத்தை ஆளுநரிடம் கையளித்து விட்டு இருப்பது என்பது ஜனநாயக விரோத செயல். தமிழ் மக்களுக்கு கிடைத்த உரிமைகள் அரசாங்கம் மறுதலிக்கிறது என்பதே இதன் பொருள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை தமிழரசு கட்சியினர் ஜனாதிபதியுடன் சந்தித்து பேசி இருக்கிறார்கள். சில விடயங்களை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் சிலவற்றுக்கு அவகாசம் வேண்டுமென சொல்லி இருப்பதாக தெரிகிறது. ஜனவரி மாதத்தில் இருந்து ஒரு தீர்வு திட்டம் தொடர்பாக பேசலாம் எனக் கூறியிருக்கிறார்.

யுத்தம் நடந்த காலத்திலிருந்து யுத்தம் முடிந்ததற்கு பிற்பாடு வரை பல்வேறுபட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்றிருக்கிறது. பல விடயங்கள் பேசிப்பேசி எதுவுமே நடைமுறைக்கு கொண்டுவரத சூழலே காணப்பட்டது.

அரசாங்கம் திட்டவட்டமான முடிவுக்கு வரவேண்டும். மூன்று மாதம் நான்கு மாத காலத்திற்குள் பேசி அரசியல் யாப்புக்குள் அதை உள்ளடக்க முயல வேண்டும்.

தமிழர் தரப்புக்கு என்ன தேவை என்பதை தமிழ் கட்சிகளுக்குள் ஒருமித்த நிலைப்பாடு கொண்டு வரப்பட வேண்டும். இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ,தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவை வெவ்வாறு நிலைப்பாடுகளை எடுக்க முடியாது.

அரசாங்கத்துடன் தமிழ் மக்களுக்கான தீர்வு திட்டம் தொடர்பாக பேசப் போகின்றோமாக இருந்தால் தங்களை தாய் கட்சி என்று சொல்லும் தமிழ் அரசுக் கட்சி ஏனைய சகல கட்சிகளை அழைத்து அவர்களோடு ஒரு முடிவுக்கு வரவேண்டும் புதிய அரசியல் யாப்பு வருவதாக இருந்தால் தமிழ் மக்களைப் பொருத்தவரையில் என்னென்ன விடயங்களை கொண்டதாக இருக்க வேண்டும் என்று முடிவுக்கு நாங்கள் வந்து அந்த முடிவின் அடிப்படையில் தான் அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைகளை செய்ய வேண்டும்.

எல்லை நிர்ணய ஆணைக்குழுவை நியமிக்கப் போவதாக சொல்கிறார்கள். எல்லை நிர்ணயத்திற்கு இன்னும் மூன்று நான்கு வருடங்கள் ஆகலாம்.

சாணக்கியன் கொண்டு வந்த திருத்தச் சட்டத்தை அவர்கள் நிராகரித்து விட்டார்கள். அது பாராளுமன்றத்தில் இருந்து குப்பையில் போடப்பட்டு விட்டது.

பழைய முறையில் தேர்தல் நடத்தவும் அரசாங்கம் தயார் இல்லை. ஆனால் அவ்வாறு தயாராக இருந்தால் அடுத்த வருடமே தேர்தலை நடத்த முடியும்.

ஒரு பக்கத்தில் அரசாங்கம் விரும்பினால் எல்லை நிர்ணயக் குழு பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமித்து செய்யலாம். ஆனால் பழைய மாதிரியான சட்டங்களின் கீழ் தேர்தலை நடத்தி மாகாண சபையை கொண்டு வர வேண்டும். மாகாண சபை வராத பட்சத்தில் அரசாங்கம் தான் விரும்பிய அனைத்தையும் ஆளுநர் ஊடாக செய்யும்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட சபை இருக்கிற பொழுதே பௌத்த ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பலவற்றுக்கு எதிராக காத்திரமான செயற்பாடுகளை செய்யலாம்.

என்னைப் பொறுத்தவரையில் தமிழ் தரப்பில் இருக்கக்கூடிய அனைவரும் இணைந்து அரசாங்கத்திற்கு சொல்ல வேண்டியது நம்மைப் பொறுத்தவரை மாகாண சபை முறை கொண்டுவரப்பட்டது தமிழ் மக்களின் பிரச்சினை தீர்ப்பதற்காகவே. குறைந்தபட்சம் வடக்கு கிழக்குக்காவது மாகாண சபை தேர்தல் என்பது நடத்தப்பட வேண்டும்.

வடக்கு கிழக்கில் உள்ள மாகாணத்தை ஆளுநரிடம் கையளித்து விட்டு இருப்பது என்பது ஜனநாயக விரோத செயல். தமிழ் மக்களுக்கு கிடைத்த உரிமைகள் அரசாங்கம் மறுதலிக்கிறது என்பதே இதன் பொருள் - என்றார்.

No comments