கலாசார அலுவல்கள் திணைக்கள அனுசரணையில் கோப்பாய் பிரதேச செயலகமும் கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்திய ‘இலக்கிய விழா 2025‘ நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கோப்பாய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
கோப்பாய் பிரதேச செயலாளரும் கலாசார அதிகார சபையின் தலைவருமான ஈ.தயாரூபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புக்கள் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் தி.வேல்நம்பி கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக யாழ். மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இ.கிருஸ்ணகுமார் பங்கேற்றார்.
இவ்விழாவில் கதை கூறல், நாட்டார் பாடல், கவியரங்கம் உள்ளிட்ட பல கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.
நுண்கலைப்பீட சிரேஸ்ட விரிவுரையாளர் சத்தியப்பிரியா கஜேந்திரனின் நெறியாழ்கையில் நீர்வையூர் பொன் சக்தி கலாகேந்திரா மாணவர்கள் வழங்கிய நாட்டிய அர்ப்பணம் மற்றும் மயில் நடனம் பார்வையாளர்களை கவர்ந்தன.
நிகழ்வின் இறுதியில் தேசிய பிரதேச இலக்கியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் திறந்த பிரிவினருக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அதேவேளை கோப்பாய் பிரதேச செயலகம் நடாத்திய முதல் இலக்கிய விழா இதுவென்பது குறிப்பிடத்தக்கதாகும்


















No comments