Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

புதிய ஆண்டை அபிவிருத்தியின் புதிய அத்தியாயமாகவும் மாற்றியமைப்போம்


பிறக்கவுள்ள புதிய ஆண்டை இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஆண்டாகவும், அபிவிருத்தியின் புதிய அத்தியாயமாகவும் மாற்றியமைப்போம் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்த பாதிப்புகள் குறித்தும், அதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் நிவாரண மற்றும் தீர்வு நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. அத்தோடு, மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதிகளின் பயன்பாடு மற்றும் திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநரால் மூன்று முக்கிய முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன.

தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையை மத்திய சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவது தொடர்பான கௌரவ மத்திய அமைச்சரின் கோரிக்கை ஆளுநரால் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பில் நீண்ட நேரம் ஆராயப்பட்டதோடு, தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையுடன் இயங்கிவரும் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை மாத்திரம் தனி அலகாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையுடன் இணைப்பது தொடர்பான கருத்தும் முன்வைக்கப்பட்டது.

வட்டுக்கோட்டை வலயக் கல்வி அலுவலகத்தை புதிதாக உருவாக்குவது தொடர்பான முன்மொழிவுக்கு கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியன இணைந்து, மத்திய சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டுடன் பெண் நாய்களுக்கான கருத்தடை சிகிச்சையை மேற்கொள்ளும் பொறிமுறைக்கும் இக்கூட்டத்தில் அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.றஜீவன், எஸ்.சிறிபவானந்தராஜா, சி.சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மற்றும் அர்ச்சுனா இராமநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், உள்ளூராட்சி மன்றங்களின்  தவிசாளர்கள், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாண அமைச்சின் செயலாளர்கள், மற்றும் மாகாண, மத்திய அமைச்சின் திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பல அரச உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.









No comments