வடக்கு மாகாணம் முன்னரைப்போன்று கல்வி, விளையாட்டு மற்றும் கலை ஆகிய துறைகளில் மீண்டும் உன்னத நிலையை அடைய வேண்டும். கல்விக்கு அப்பால் கலையும் விளையாட்டும் மாணவர்களுக்கு இன்றியமையாதது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டுக் கழகங்கள் மற்றும் கலைமன்றங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், ஆற்றுகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர்மடம் பாடசாலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களுள் ஒருவராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
இளைய சமூகத்தினர் தமது ஓய்வு நேரங்களை கலை மற்றும் விளையாட்டுச் செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதை நாம் ஊக்குவிக்க வேண்டும். மாணவர்களுக்குப் போதிய ஓய்வு நேரங்களை உருவாக்கிக் கொடுத்து, அவர்களை இத்துறைகளில் ஈடுபடுத்த வேண்டும். அப்போதுதான் சமூகத்தில் அச்சுறுத்தலாக விளங்கும் போதைப்பொருள் பாவனை மற்றும் கலாசார சீரழிவுகளில் இருந்து எமது இளைய சமூகத்தைப் பாதுகாக்க முடியும். இன்று வழங்கப்படும் உபகரணங்களைப் பயன்படுத்தி உங்கள் திறமைகளை நீங்கள் மேலும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும், என மேலும் தெரிவித்தார்.
நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 14 கலைமன்றங்களுக்கு ஆற்றுகைப் பொருட்களும், 100 விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் அதிதிகளால் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.







No comments