அனலைதீவின் கல்வி பொருளாதார வளர்ச்சிக்கு புலம்பெயர்ந்த மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட செயலர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தின் அனுசரணையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் ஊர்காவற்றுறை பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய நடமாடும் சேவையானது பிரதேச செயலாளர் வனஜா செல்வரட்ணம் தலைமையில், யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் பங்குபற்றுதலுடன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.
இவ் நடமாடும் சேவையில் உரையாற்றும் போதே மாவட்ட செயலர், அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
தீவுப்பகுதி மக்களின் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
இலங்கையிலேயே கடல்கடந்த பிரதேசங்களையும் கொண்ட மாவட்டமாக எமது மாவட்டம் காணப்படுகிறது, குறிப்பாக நெடுந்தீவு, எழுவைதீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு மக்கள் பல்வேறுபட்ட அடிப்படைத் தேவைப்பாடுகளை உடையவர்களாக காணப்படுகின்றனர்.
இப் பிரதேசங்களில், பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் பொருத்தமான தளபாடம் மின்மை, பொருத்தமான ஆசிரிய ஆளணி வளமின்மை என பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்
ஒரு மனிதனை முழு மனிதனாக ஆக்கும் கல்விச்சாலைகள் முன்னேற்றப்பபட வேண்டியவை ஆதலால் புலம்பெயர்ந்த நாடுகளில் வசிப்பவர்கள் இதற்கான தமது அர்ப்பணிப்பை மேற்கொள்வார்களாக இருந்தால் ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும்.
அதேநேரம், நெடுஞ்சாலை கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் பிமல் ரத்நாயக்க தீவுப்பகுதி வீதி புனரமைப்பிற்காக ரூபா 250 மில்லியன் நிதி ஒதுக்கியுள்ளார். மிக கஷ்டத்தின் மத்தியில் கடல் கடந்த தீவுக்கான திட்டங்களை நிறைவேற்ற தவிசாளர், பிரதேச செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைவரதும் ஒத்துழைப்புடன் இப்பிரதேசத்தில் ரூபா 40 மில்லியன் வீதி புனரமைப்பு வேலைத்திட்டத்திற்காக நடைமுறைப்படுத்தியுள்ளனர் என தெரிவித்தார்.
இந் நடமாடும் சேவையில் ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள் (தேசிய அடையாள அட்டை), ஓய்வூதியம் தொடர்பான சேவைகள், பிறப்பு, இறப்பு மற்றும் உத்தேச வயது சான்றிதழ்கள் தொடர்பான சேவைகள்,மோட்டார் வாகன பதிவு மற்றும் வாகன வருமான அனுமதிப்பத்திரம் தொடர்பானசேவைகள், பிரதேச சபைகளால் வழங்கப்படும் சேவைகள், பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், மனிதவள அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழில் வழிகாட்டல்கள்,திறன் அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழிற்கல்வி வழிகாட்டல்கள், சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், முதியோர் தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகள், காணி தொடர்பான சேவைகள், மருத்துவ முகாம் போன்ற சேவைகள் வழங்கப்பட்டன. மேலும் பொதுமக்களுக்கு கண்புரை பரிசோதனை இடம்பெற்று இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்குதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
மேலும், துணி பை, முதியவர்களுக்கான அத்தியாவசியப் பொதிகள், மரக்கன்றுகள் என்பன வழங்கப்பட்டதுடன், மாவட்ட செயலாற்றினால் மரக்கன்றும் நாட்டப்பட்டது.




.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)


No comments