பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகளினால் தான் பழைய பூங்கா குதறப்பட்டு கொண்டிருக்கிறது என யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்நகரப்பழைய பூங்கா(Old park Jaffna) அதில் உள்ளக விளையாட்டரங்கு அமைப்பது விடயத்தில் மிகப்பலமான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டிருப்பதுடன் தற்போது எதிர்ப்பாளர்களில் ஒரு சாரார் நீதிமன்றத்தையும் நாடியுள்ளனர்.
இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட செயலராக சிறிதுகாலம் (14 மாதங்கள்) பணியாற்றியவன் என்றவகையில் இந்த பழைய பூங்கா பற்றிய எனது கரிசனையையும் எமது அதிகாரிகளினதும் அரசியல்வாதிகளினதும் குறுகிய சிந்தனைகளையும் பற்றிப்பகிர்ந்து கொள்ளலாமென எண்ணுகிறேன்.
யாழ்ப்பாணப் பழையபூங்கா கொண்டிருந்த சிறப்பையும் அதன் தொன்மையையும் பெறுமதியையும் அறிந்து கொள்ளாது, அபிவிருத்தி என்ற போர்வையில் எமது இளைய சமுதாயம் மட்டுமன்றி கற்றறிந்தோர் சமுகம் எனக்கூறிக்கொள்ளும் ஒரு சாரார், பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகள் போன்றோர் இத்தகைய பதிலீடற்ற பெரும் சம்பத்துக்கள் பறிபோவதைப்பற்றி எந்தவித கவலையுமின்றி வாழ்ந்துகொண்டிருப்பது வருத்தமளிக்கின்றது.
ஆட்சிக்கு வரும் அரசுகளும் அவர்களால் நியமிக்கப்படும் ஆளுனர்களும் தமக்குரிய அதிகாரங்களை மக்கள் நலனுக்காகவன்றி அம்மக்களின் எதிரகாலத்தைக் கருத்தில் கொள்ளாது அவரவர் தனிப்பட்ட அபிலாசைகளுக்காகவும் அரசியல் நோக்கங்களுக்காகவும் தான்தோன்றித்தனமாகப் பிரயோகிப்பதும் அதனை எதுவித ஆட்சேபனையுமின்றி அதிகாரிகள் சிரமேற்கொண்டு செயற்படுத்துவதும் நாம் எமது நிருவாக வரலாற்றில் தரிசித்த உண்மைகள்.
2023 ஆம் ஆண்டு தை 18 இல் மாவட்ட செயலராக பொறுப்பேற்று சில நாட்களில் அப்போது ஆளுனராக இருந்தவர் பழைய பூங்காவின் ஒரு பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுடன் ஏற்கனவே உள்ள ஆளுனர் அலுவலகத்தோடு சில கட்டுமானங்களையும் உருவாக்கியிருந்தார்.
மேலும் காணியைப்பிரித்து குறுக்காக வேலியிட்டு அது ஆளுனர் அலுவலகத்திற்குரியது என அத்துமீறலும் செய்திருந்தார்.
இந்நிலையில் எனது விடுதியிலிருந்து பார்த்தபோது அதிகாலை கனரக இயந்திரங்கள் அந்தக்காணியில் ஏதோ வேலைக்காக வந்திருப்பதைக் கேள்வியுற்றேன். அவை மாநகர சபைக்குரியவை என்பதையும் அறிந்துகொண்டேன்.
உடனடியாக மாநகர ஆணையாளருடன் தொடர்புகொண்டு இந்தக்காணி அரசாங்க அதிபருக்குரியது என்பது உங்களுக்குத் தெரியும்தானே! ஆயின் எனக்குத்தெரியாமல் எனது அனுமதி பெறாமல் என்ன செய்யப்போகிறீர்கள் என வினவியபோது ஆணையாளர் அது எங்களுடைய வேலைத்திட்டம் இல்லை. ஆளுனரின் உத்தரவுக்கமைய இயந்திரங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன எனக்கூறினார்.
உடனே இது அரசாங்க அதிபரின் காணிக்குள் எனது அனுமதியில்லாமல் எவரும் எந்த வேலையும் செய்ய அனுமதியில்லை. என்றுகூறி இயந்திரங்களை வெளியேறப்பணித்தேன். ஆணையாளர் இதுபற்றி ஆளுனருக்குத் தெரிவித்ததும் ஆளுனர் என்னுடன் தொடர்புகொண்டு தான் ஒரு நடைபயிலும் சாலை அமைக்க இருப்பதாகவும் அதைச் செய்யப்போவதாகவும் அதைத்தடுக்கவேண்டாம் எனவும் கூறினார்.
ஆனாலும் பழையபூங்கா அபிவிருத்தி பற்றி தீர்மானிக்கவேண்டியது மாவட்ட செயலரே என்றும் அதன் அபிவிருத்தி பற்றிய முன்மொழிவுகள் நகர அபிவிருத்தி அதிகார சபை ஆராய்விலுள்ளது பற்றியும் ஆளுனரோடு விவாதித்தேன்.
அவர் உடனடியாக நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்களை காலை எட்டு மணிக்கே என்னிடத்தில் அனுப்பி எனது ஒப்புதலைப்பெற முயன்றார்.
ஆனாலும் இறுதிவரை நான் அதற்கான ஒப்புதலை வழங்கவுமில்லை குறித்த வேலை நடை பெறவுமில்லை.
27 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப்பெறுமதியான அமைவிடத்தில் வரலாற்றுப்பதிவுகள் பலதையும் கொண்ட இந்தக்காணியை எந்தவித தூரநோக்குமின்றி நினைத்தபடி துண்டாடி வெறும் ஒழுங்கற்ற கட்டிடக்காடாக்கி இன்று அழகிழந்து கிடக்கிறது பழைய பூங்கா!
அரியாலை, செம்மணி, மண்டைதீவு, கோப்பாய் போன்ற நகரைச்சுற்றிய இடங்களுக்கு கொண்டு போயிருக்கக்கூடிய அரச கட்டிடங்கள் கைதடி, மாங்குளம், வ்வுனியா போன்ற பகுதிகளில் அமைக்கப்பட வேண்டிய ஆளுனர் மாளிகை மற்றும் ஆளுனர் அலுவலகங்கள் போன்றவற்றை யாழ். நகரப் பழைய பூங்காவில் காலத்துக்குக் காலம் அமைத்து தங்கள் தான்தோன்றித்தனமான அதிகாரப்பிரயோகத்தின்மூலம் அலங்கோலப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
கண்டி, கொழும்பு, அனுராதபுரம், காலி போன்ற நெருக்கடியான நகரங்களில்கூட நகரப்பூங்காக்கள் தீண்டப்படாமல் அவற்றின் தொன்மையும் சிறப்பும் பேணப்பட்டுக்கொண்டிருக்க யாழ்ப்பாணத்தின் ஒரேயொரு பூங்காவான பழைய பூங்கா இவ்வாறு குதறப்படுவதைத் தடுத்தேயாகவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.






No comments