Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

முல்லைத்தீவு சிறுமியின் மரணம்தொடர்பில் நீதியான விசாரணை தேவை - ரவிகரன் வலியுறுத்தல்


முல்லைத்தீவு - சிலாவத்தை பகுதியைச்சேர்ந்த குகநேசன் டினோஜாவின் சந்தேகத்திற்கிடமான மரணத்திற்கு நீதியான விசாரணை மேற்கொள்ளப்படவேண்டுமெனத் தெரிவித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குறித்த சிறுமியின் மரணம்தொடர்பில் நீதியான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்றில் தம்மால் மனு கையளிக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் குறித்த சிறுமியின் மரணத்தில் மருத்துவத் தவறுகள் இருப்பதாக பரிசோதனை அறிக்கைகள் வெளிவந்தால், உரிய தரப்பினருக்கு மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுமென இதன்போது முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் பிரதிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், 

முல்லைத்தீவு - சிலாவத்தைப் பகுதியைச்சேர்ந்த குகநேசன் டினோஜா என்னும் சிறுமியின் மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக எனக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. 

இதேபோல் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் இவ்வாறான சந்தேகத்திற்கிடமான மரணச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. 

இதற்கு முன்னர் வினோதரன் வினோதா என்னும்  பெண்ணினுடைய மரணம்தொடர்பிலும் என்னிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. 

இவ்வாறு கிடைக்கப்பற்ற முறைப்பாட்டிற்கு அமைவாக அந்தப் பெண்ணின் குடும்பத்தாருடனும், வைத்தியர்களுடனும் ஏற்கனவே கலந்துரையாடியிருந்தேன். 

இதனையடுத்து அப்பெண்ணின் மரணம் தொடர்பிலே அவரது குடும்பத்தாரினால் என்னிடம் அறிக்கையொன்றும் கையளிக்கப்பட்டிருந்தது. 

அந்தவகையில் வினோதரன் வினோதாவின் மரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பாராளுமன்றில் மனு ஒன்றினைச் சமர்ப்பித்துள்ளேன். 

இந்நிலையில் சபாநாயகராலும் அந்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே அந்த மரணம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படும். 

இதேவேளை குகநேசன் டினோஜாவின் மரணம் தொடர்பிலும் தற்போது என்னிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

அத்தோடு இத்தகைய மரணச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதால்  முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு செல்வதற்கே பயமாக்இருப்பதாக மக்கள் என்னிடம் முறையிடுகின்றனர். 

மேலும் குகநேசன் டினோஜாவின் சந்தேகத்திற்கிடமான மரணத்திற்கு நீதியான விசாரணைகளை மேற்கொள்ளளுமாறு பாராளுமன்றிலும் வலியுறுத்துவேன் என்றார் 

 முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் பிரதிப் பணிப்பாளர் இதன்போது பதிலளிக்கையில், 

வினோதரன் வினோதாவினுடைய சந்தேகத்திற்கிடமான மரணம்தொடர்பில் மாகாண சுகாதார பணிமனையினால் விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினால் விரைவில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

அதேபோல் குகநேசன் டினோஜாவின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பிலும் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும். 

குறிப்பாக தற்போது எம்மால் குறித்த சிறுமியினுடைய உடற் கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குருதி, சிறுநீர் மாதிரிகள் கொழும்பிற்கு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. 

அந்தவகையில் மருந்தின் அளவு கூடுதலாகச் செலுத்தப்பட்டதால்தான் சிறுமியின் மரணம் நிகழ்ந்ததாக பரிசோதனை அறிக்கை வெளிவந்தால், உரியதரப்பினருக்கெதிராக மிகக்கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனத் தெரிவித்தார். 


No comments