சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதி ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் கடந்த ஒரு மாத காலமாக கோமா நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் , அவரது சகோதரியை , யாழ்ப்பாண பொலிஸார் இன்றைய தினம் புதன்கிழமை சுமார் இரண்டரை மணி நேரம் விசாரணை செய்து வாக்கு மூலம் பெற்றுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் கடந்த நவம்பர் மாதம் 06ஆம் திகதி நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்கு செல்லாத குற்றத்திற்காக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து நீதிமன்ற உத்தரவில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் விளக்க மறியலில் தடுத்த வைக்கப்பட்டிருந்த நிலையில் ,தலையில் காயம் ஏற்பட்டு தற்போது கடந்த 11ஆம் திகதி முதல் கோமா நிலையில் சிகிசிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரம் குறித்த இளைஞனின் சகோதரி ஊடக சந்திப்பில், அண்ணாவை கடந்த 08ஆம் திகதி வைத்திய சாலையில் சென்று பார்த்த போது "அடித்து போட்டாங்கள் " என தன்னிடம் சொன்னார் என கூறி இருந்தார்.
அந்நிலையில் , தாம் அடிக்கவில்லை. சிறையில் தடுக்கி விழுந்தார் என தெரிவித்த யாழ்ப்பாண சிறைச்சாலை நிர்வாகம் . இளைஞனின் சகோதரி உண்மைக்கு புறமான தகவலை தெரிவித்தார் என பெண்ணிற்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸ் இன்றைய தினம் புதன்கிழமை குறித்த பெண்ணை பொலிஸ் நிலையம் அழைத்து சுமார் இரண்டரை மணி நேரமாக விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலத்தை பெற்றுக்கொண்டனர்.
அதேவேளை , குறித்த இளைஞன் ஊரில் நடைபெற்ற கைக்கலப்பு தொடர்பான வழக்கு விசாரணையையே எதிர்கொண்டு வரும் நிலையில் , சிறைச்சாலை நிர்வாகம் தெரிவித்ததாக சில ஊடகங்களில் இளைஞனுக்கு கசிப்பு வழக்கு உண்டு என்றும் , இளைஞனுக்கு "கசிப்பு சிக்" என சிறைச்சாலை நிர்வாகம் கண்டு பிடித்த புதுவகையான நோய் தொடர்பில் வெளியான செய்திகளால் இளைஞனின் குடும்பம் கடும் மன அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.






No comments