ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது.
இருந்தும் உள்ளூராட்சி மன்ற சட்டங்களில் இருக்கும் விசேட சரத்துக்கமைய தவிசாளருக்கு இருக்கும் அதிகாரம் ஊடாக பாதீடு நடைமுறையாககின்றது.
ஊர்காவற்துறை பிரதேசபையின் முதலாவது பாதீடு கடந்த 24 ஆம் திகதி தோற்கடிக்கப்பட்ட நிலையில் குறித்த பாதீட்டை மீண்டும் சபையில் நிறைவேற்றுவதறகான விசேட அமர்வு இன்றைய தினம் திங்கட்கிழமை அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தவிசளர் அன்னராச தலைமையில்இடம்பெற்றது.
இதன்போது சபையின் வருமானம் ஊடாக முன்னெடுக்கப்படும் திட்டங்கள், உதவி கோரியுள்ள முன்மொழிவுகள், சிறப்பு வருவாய் முயற்சிகள், உள்ளிட்ட பல திருத்தங்களுடன் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு
இரண்டாவது தடவையாகவும் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.
அதன் போது, மக்கள் நலனோ தற்போதைய தேவை கருதிய நடைமுறைக்கு ஏற்றதோ இல்லாது குறித்த பாதீடு மீண்டும் முன்மொழியப்பட்டுள்ளதாகவும், நடைமுறை சாத்தியமான விடையங்களை உதாசீனம் செய்துள்ளதாகவும் கூறி உறுப்பினர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர்.
பல்வேறு வாத பிரதிவாதங்களுக்கு பின்னர் பாதீட்டை நிறைவேற்றும் பொருட்டு தவிசாளரால் சபையில் வாக்கெடுப்புக்கு இரண்டாவது தடவையாகவும் விடப்பட்டது.
பாதீட்டை நிறைவேற்றுவதற்காக விடப்பட்ட வாக்கெடுப்பின் போது எதிராக 8 வாக்குகளும் ஆதரவாக 5 வாக்கிகளும் கிடைக்கப்பெற்ற நிலையில் குறித்த பாதீடு மேலதிக 3 வாக்குகளால் தோற்கடிக்கப்படுள்ளது.
பாதீட்டுக்கு எதிராக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் 4 உறுப்பினர்களும் , தேசிய மக்கள் சக்தியின் 03 உறுப்பினர்களும் , தமிழரசு கட்சியின் ஒரு உறுப்பினருமாக 08 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
ஆதரவாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் 03 உறுப்பினர்களும் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஒரு உறுப்பினரும் , தமிழரசு கட்சியின் ஒரு உறுப்பினருமாக 05 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
இதன்படி 2026 க்கான பாதீடு மேலதிக 3 வாக்குகளால் தோற்கடிக்கப்படுள்ளது.






No comments