யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பட்ட திருவிழாவின் போது சுகாதார விதிமுறைகளை பேண தவறிய 24 உணவு கையாளும் நிலையங்களுக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த தைப்பொங்கல் தினத்தன்று வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் இடம்பெற்ற பட்ட திருவிழாவின் போது, மருத்துவ சான்றிதழ் இல்லாமல் உணவினை கையாண்டமை, திண்மக்கழிவுகளை திறந்த வெளியில் அப்புறப்படுத்த காரணமாக அமைந்தமை, அனுமதிக்கப்பட்ட உணவுத்தர கொள்கலன்களை உணவுப்பொதியிடலுக்கு பயன்படுத்தாது பிளாஸ்ரிக் ரக கொள்கலன்களை பயன்படுத்தியமை, முகச்சவரம் மற்றும் தனிநபர் சுகாதாரம் பேணாமல் உணவினை கையாண்டமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ஐஸ்கிறீம் வாகனங்கள், பஞ்சு மிட்டாய் உற்பத்தி,காரம் சுண்டல் வண்டில்கள், பானிப்பூரி விற்பனை நிலையங்கள் உட்பட 24 உணவு கையாளும் நிலையங்களிற்கு எதிராக வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பொதுச்சுகாதார பரிசோதகர் ப. தினேஸ் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வழக்கு தாக்கல் செய்தார்.
குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது. 24 உரிமையாளர்களில் 19 பேர் மன்றில் முன்னிலையாகி தம் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டனர்.
அதனை அடுத்து 19 உரிமையாளர்களையும் கடுமையாக எச்சரித்த மன்று அவர்களுக்கு 4 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது.
அதேவேளை மன்றில் இன்றைய தினம் முன்னிலையாக ஏனைய 05 உரிமையாளர்களையும் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 30ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு அவர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.







No comments