தைப்பொங்கல் தினமான நாளைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸா நாயக்க காணி விடுவிப்பு தொடர்பிலான அறிவிப்புக்களை விடுப்பார் என பாதுகாப்பு தரப்பினால் பறிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
" மக்களின் காணிகள் மக்களுக்கே .. " என ஜனாதிபதி கூறி வருகின்றார். அந்நிலையில் வலி. வடக்கு பிரதேசத்தில் மாத்திரம் 2 ஆயிரத்து 500 ஏக்கர் தனியார் காணிகள் பாதுகாப்பு தரப்பினரின் வசம் காணப்படுகிறது.
குறிப்பாக பலாலி மேற்கு , பலாலி வடமேற்கு , மயிலிட்டி துறை தெற்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவு முற்றாக பாதுகாப்பு தரப்பின் கட்டுப்பாட்டிற்குள் காணப்படுகிறது.
அவற்றில் பெரும்பாலான காணிகள் , பாதுகாப்பு தரப்பின் பயன்பாட்டில் இல்லாது பற்றைக்காடுகளாக காணப்படுகிறது. அந்த காணிகளை விடுவிப்பதில் பாதுகாப்பு தரப்பினருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அடாத்தாக அவற்றையும் கையகப்படுத்தி வைத்துள்ளனர்.
அதேபோன்று பலாலி கிழக்கில் சுமார் 600 ஏக்கர் காணியும் எந்த பயன்பாடும் இல்லாது காணப்படுகிறது.
அதேவேளை வசாவிளான் சந்திக்கு அருகில் உள்ள மானம்பிராய் ஆலயம் உள்ளிட்ட மூன்று ஆலயங்கள் ஏற்கனவே விடுவிக்க சம்மதம் தெரிவிக்கப்பட்ட போதிலும் அவையும் இன்னமும் விடுவிக்கப்படவில்லை.
அதேபோன்று குரும்பசிட்டி , கட்டுவான் பகுதிகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக என அடாத்தாக தனியார் காணிகளை கையகப்படுத்தி , இராணுவத்தினர் விவசாய பண்ணைகளை நடாத்தி வருகின்றனர்.
தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக 16 பேரின் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றினை விடுவிப்பது தொடர்பில் சாதகமான முடிவுகள் எட்டப்பட்டும் என ஒன்றரை வருடங்களுக்கு மேலாக அரசாங்கம் கூறி வருகிறது. ஆனாலும் எந்த முடிவுகளும் எட்டப்படவில்லை.
அண்மையில் கூட தையிட்டி காணி பிரச்சனை தொடர்பில் கொழும்பில் கூட்டம் இடம்பெற்றுள்ளது. அதில் விகாராதிபதி உள்ளிட்ட தரப்பினரை அழைத்து கலந்துரையாடியவர்கள் , காணி உரிமையாளர்களை அழைக்கவில்லை. இது ஒரு தலைப்பட்டசமான முடிவுகளை எடுக்கும் கூட்டங்களாகவே அமைந்திருந்தது.
முதல் கட்டமாக விகாரைக்காக கையகப்படுத்தப்பட்ட காணியில் இரண்டு ஏக்கர் காணியை விடுவிக்க இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக ஊடகங்களில் முன்னர் செய்திகள் வெளியாகி இருந்தது. அதுவும் இன்னமும் விடுவிக்கப்படவில்லை.
அதேபோன்று பலாலி வீதி காலை முதல் மாலை வரை கடுமையான கட்டுப்பாடுகளுடன் திறந்து விடப்பட்டுள்ளது. குறித்த வீதியினை 24 மணி நேரமும் கட்டுப்பாடுகள் இன்றி மக்கள் பயணிக்க கூடியவாறு திறந்து விட வேண்டும்.
அத்துடன் வல்லை அராலி வீதியினையும் முற்றாக திறந்து விட்டால் , வடமராட்சி பகுதிகளில் உள்ள மக்கள் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் இலகுவில் வந்து போக முடியும். எனவே அந்த வீதியையும் முற்றாக திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜனாதிபதி யாழ்ப்பாணம் வருகை தரும் சந்தர்ப்பங்களில் போதெல்லாம் காணி விடுவிப்பு தொடர்பில் சாதகமான அறிவிப்புக்கள் வெளி வரும் என்ற எதிர்பார்ப்புக்கள் காணிகளை இழந்த மக்கள் மத்தியில் காணப்படும். ஆனால் எவ்வித அறிவிப்புக்களும் இன்றி ஜனாதிபதி செல்வதும் வழமையாகி விட்டது.
இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்ள வரும் ஜனாதிபதி காணி விடுவிப்புக்கள் தொடர்பில் சாதகமான அறிவிப்புகளை விடுப்பார் என்ற ஏக்கத்துடன் காணி உரிமையாளர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் எழுவை தீவில் கடற்படையினருக்கு நிரந்தரமாக காணிகளை சுவீகரிக்க காணி அளவீட்டு பணிகள் எதிர்வரும் 20ஆம் மற்ரும் 21ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.







No comments