யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை சுற்றி ஆடம்பர விடுதிகள் உள்ளிட்ட பிற தேவைகளுக்காக வேலணை பிரதேச சபைக்கு சொந்தமான காணியை கையகப்படுத்த அனுமதிக்க முடியாது எனவும் எக்காரணத்தை கொண்டு பிரதேச சபை காணியை எவருக்கும் வழங்க முடியாது என பிரதேச சபை தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த 15ஆம் திகதி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் வேலணை பிரதேச செயலகத்துக்குட்பட்ட மண்டைதீவு கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் மண்டைதீவு சுற்றுச்சூழல் பூங்காவுக்கென ஒதுக்கப்பட்டிருந்த சுமார் 2.5 ஏக்கர் அரச காணியை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை கோரி வருவதால் குறித்த காணியில் எதிர்வரும் காலங்களில் எதுவித அபிவிருத்தி நடவடிக்கைதையும் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வேலனை பிரதேச சபைக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த வேலணை பிரதேச சபை கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்ட போது, தவிசாளர் கருத்து தெரிவிக்கையில்,
வேலணை பிரதேச சபையானது ஒரு வருமானம் குறைந்த சபையாக இருக்கின்றது. எம்மிடம் இருக்கும் வளங்கள் முழுவதையும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையிடம் கொடுக்க முடியாது.
குறித்த காணியில் மைதானம் அமையும் எனில் அக்காணியில் பிரதேச சபை எதிர்காலத்தில் தனக்கான பெரும் வருமானம் ஈட்டும் வளமாக பயன்படுத்த முடியும்.
இதே நேரம் மைதானத்துக்கு தேவையானளவு காணி ஏற்கனவே ஒதுக்கப்பட்டு வேலைத்திட்டமும் நடைபெறுகின்றது.
இந்நிலையில் தற்போது ஆடம்பர விடுதிகள் மற்றம் பராமரிப்பு குடியிருப்புகள் உள்ளிட்ட இதர நோக்கங்களுக்காக காணி கோரப்படுகின்றது.
வருமானம் குறைந்த பிரதேச சபையாக இருக்கும் எமது சபை எதிர்காலத்தில் அந்த நிலப்பரப்பை மையமாக வைத்தே பாரியளவு வருமானத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும். எனவே இந்த செயலை ஏற்க முடியாது
எனவே வேலணை பிரதேச சபைக்கு உரித்தான காணி என்பதால் சபையின் எதிர்கால நலன்கருதி எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் குறித்த காணியை நாம் வேறு ஒருவருக்கும் வழங்கும் நிலையில் இல்லை என தவிசாளர் கூறி அதை தீர்மானமாக முன்மொழிந்து சபையில் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.







No comments