Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தமிழ் மக்களுடைய அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஒரு ஆவணம் ஒன்றை தயாரிக்க முயற்சி - யாழில் தமிழ் கட்சிகள் கூடி முடிவு


மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட  முடியாதது. ஆகவே இருக்கிற முறையிலே தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழில் சந்தித்து பேச்சு நடத்தின. 

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எம்.ஏ.சுமந்திரன் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

 அரசியலமைப்பு விவகாரம் சம்பந்தமாக அரசாங்கம் எடுத்திருக்கிற நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்கிற நடவடிக்கைகள் சம்பந்தமாக பேசியிருக்கிறோம். அண்மைக் காலமாக சில ஆயத்தங்கள் செய்வதாக அரசாங்கம் கூறிவருகிறது. எவ்வளவு தூரத்திற்கு அது உண்மையானது என்பது தெரியவில்லை. பிரதம மந்திரி, நீதி அமைச்சர் உள்ளிட்டோர் இது தொடர்பில் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் தமிழ் மக்களுடைய அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஒரு ஆவணம் ஒன்றை தயாரிக்கலாம் என நாங்கள் முடிவெடுத்திருக்கிறோம்.

இது சம்பந்தமாக எங்கள் இரண்டு கட்சிகளும் இணைந்து இந்த முயற்சியிலே ஈடுபட போகிறது. இதன் பொழுது தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் ஏனைய தரப்புகளும் எங்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என விரும்புகிறோம்.

தமிழ் தேசத்தினுடைய நிலைப்பாடு என்ன என்பது குறித்து ஒரு ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்துவது காலத்தின் தேவையாக இருக்கிறது. பலர் அரசாங்கம் சாட்டுப் போக்கு சொல்லாமல் இருப்பதற்கும் சர்வதேசத்துக்கு நேரடியாகவும் இதுதான் தமிழ் மக்களின் ஆவல் ஆசைகள் என்று சொல்லக்கூடிய வகையிலும் ஏற்கனவே பல வரைவுகள் யோசனைகள் ஆவணங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் எல்லாம் பார்த்து ஒரு குறித்த நிலைப்பாட்டை முன் வைப்பதற்கான ஒரு முயற்சி ஒன்றை நாங்கள் ஆரம்பிக்கிறோம். வெகுவிரைவில் அதனை பூர்த்தி செய்வோம். மற்றவர்களும் இணைந்து தங்கள் நிலைப்பாடுகள் தெரியப்படுத்தினால் நல்லது. 

மாகாண சபை தேர்தல் பிற்போடப்படுவது சம்பந்தமாக நாங்கள் ஆராய்ந்தோம். மாகாண சபைகள் இயங்காமல் இருப்பது எங்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.

தமிழ் தேசிய பிரச்சனைக்கு தீர்வாகவே மாகாண சபை முறைமை கொண்டுவரப்பட்டது. அது முழுமையான தீர்வு அல்ல. நாங்கள் ஏற்றுக் கொண்ட தீர்வும் அல்ல. அது பல குறைபாடுகளோடு இயங்கினாலும் ஏழு எட்டு வருடங்களாக அது இயங்காமல் இருந்தது. அது அரசியலமைப்புக்கு உட்பட்ட விடயம்.

ஜனாதிபதி தேர்தல் அறிக்கையிலே ஒரு வருட காலத்துக்குள்ளே மாகாண சபை தேர்தல்களை நடத்தி முடிப்போம் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார்கள். அப்படி வாக்குறுதி கொடுத்து இருந்தும் கூட இப்பொழுது ஒரு வருடம் நிறைவடைந்து அதற்குப் பிறகு நான்கு மாதங்களும் ஆகியும் இன்னமும் மாகாண சபை தேர்தல் வைப்பதற்கான அறிகுறி கிடையாது. அதை இழுத்தடிப்பதற்கான முயற்சிகள் நடைபெறுகிறது.

எனவே இழுத்தடிப்பை விட்டு மாகாண சபை தேர்தல் இருக்கின்ற முறையிலேயே நடத்தப்பட வேண்டும். தேர்தல் முறைமையை மாற்றுவதற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. தேர்தல் முறையில் சீர்திருத்தம் செய்வதற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. அதை செய்ய முடியும். 

ஆனால் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட  முடியாதது. ஆகவே இருக்கிற முறையிலே தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும். அது காலம் கடந்ததாக இருக்கிறது. அரசாங்கம் இந்த விடயத்தில் நொண்டிச்சாட்டுக்களை சொல்லிக் கொண்டிருக்காமல் உடனடியாக மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும்.

நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாப்பதற்கான சட்டம் என்ற வரைபு கொண்டுவரப்பட்டிருக்கிறது. கொடுக்கப்பட்ட வாக்குறுதி என்னவென்று சொன்னால் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்குவது. ஆனால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குகின்ற சட்டமூலத்திலே அதைவிட மோசமான இன்னொரு சட்ட வரைவை உட்பகுத்துவது எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

இது சம்பந்தமாக இதற்கு முன்னரும் இரண்டு வரைபுகள் முன்வைக்கப்பட்டது அந்த வரைபுகள் வந்த வேளையிலே ஜேவிபி கட்சியைச் சேர்ந்தவர்கள் பயங்கரவாத தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் அதற்கு மாற்றீடாக இன்னொரு சட்டம் கொண்டுவரப்பட வேண்டாம் என்பதிலே எங்களை விட உறுதியாக இருந்தவர்கள்.

கொண்டுவரப்படுகிற வரைவுகள் சம்பந்தமாக நாங்கள் பேச்சுவார்த்தைகளுக்கு கலந்து கொண்டாலும் கூட அவர்கள் அந்த பேச்சுவார்த்தையிலேயே பங்கேற்காமல் இன்னொரு சட்டம் கொண்டுவரக்கூடாது என்பது ஒரே நிலைப்பாட்டிருந்தவர்களே ஜேவிபி 25 மாவட்டங்களில் நாங்கள் போராட்டத்தை நடத்திய போது அனைத்து மாவட்டங்களிலும் எங்களோடு சேர்ந்து கைகோர்த்து அந்த போராட்டத்தில் ஈடுபட்டார்கள். 

பல சந்தர்ப்பங்களிலே அந்த நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படையாக சொன்னவர்கள். இன்றைக்கு அதிலே தலைகீழாக மாறி இன்னொரு சட்டமூலத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். அதிலே இருக்கிற விடயங்கள் இப்போது இருக்கிற பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைவிட மிக மோசமான விடையங்கள் இருக்கிறது அவற்றைப் பற்றி எல்லாம் பேசுவதற்கு முன்னதாக பயங்கரவாத தடுப்புச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும். மாற்றீடாக இன்னொரு சட்டம் ஏற்படுத்தப்படக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் அரசாங்கத்துக்கு இதனை அறிவிப்போம் - என்றார்.

No comments