யாழ்ப்பாணத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் கடந்த ஒன்றரை வருடகாலமாக பணியாற்றிய பெண், தான் கடையில் பணியாற்றி கால பகுதியில் சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான நகைகளை களவாடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்.புறநகர் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் நகர் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடையில் கடந்த ஒன்றரை வருட காலமாக நகைகளுக்கு பொறுப்பான பதவியில் பணியாற்றி வந்த நிலையில் தனக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளதாக கூறி கடந்த 3 மாத கால பகுதிக்கு முன்னர் தனது பணியிலிருந்து விலகியுள்ளார்
இந்நிலையில் அண்மையில் நகைக்கடையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் போது, சுமார் 2 கிலோ கிராம் தங்க நகைகள் காணாமல் போனமை கண்டறியப்பட்டுள்ளது.
அது தொடர்பில் நகைக்கடை முகாமைத்துவத்தினர் , மேற்கொண்ட உள்ளக விசாரணைகளின் அடிப்படையில் பணியிருந்து விலகிய பெண் மீது சந்தேகம் கொண்டு , அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த பெண்ணை பொலிஸார் அழைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை ,தான் கடையில் கடமையாற்றிய கால பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறிது சிறிதாக நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டதுடன் , திருடிய நகைகளை அடகு வைத்தும் , விற்றும் , சிலவற்றை நிலத்தினுள் புதைத்தும் வைத்துள்ளதாக கூறியுள்ளார்.
அதனை அடுத்து அப்பெண்ணை கைது செய்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியவேளை பெண்ணை எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
அதேவேளை, திருடிய நகைகளை அடகு வைப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் உதவியவர்கள் தொடர்பிலும் , திருடப்பட்ட நகைகளை மீட்கவும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.







No comments