Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ்.பல்கலை பட்டமளிப்பு விழா நாளை மறுதினம்


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நாளை மறுதினம் வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையான நான்கு நாள்கள் பன்னிரண்டு அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இம்முறை பட்டமளிப்பு விழாவின் போது,  376 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2557 உள்வாரி மாணவர்களுக்கும், 252 வெளிவாரி மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட இருப்பதுடன், 66 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களுடன் ஒருவருக்கு வியாபார நிர்வாகத்தில் சான்றிதழ்  அடங்கலாக 3 ஆயிரத்து 252 பேர் பட்டங்களையும், தகமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளவுள்ளனர். 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது வேந்தர் தகைசார் பேராசிரியர் இராஜரட்ணம் குமாரவடிவேல் பட்டமளிப்பு விழாவுக்குத் தலைமை தாங்கி, பட்டதாரிகளுக்கான பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும், தங்கப் பதக்கங்களையும், பரிசில்களையும், புலமைப் பரிசில்களையும் வழங்கிக் கௌரவிக்கவுள்ளார்.

இப்பட்டமளிப்பு விழாவில், உயர் பட்டப் படிப்புகள் பீடம், இணைந்த சுகாதார விஞ்ஞானபீடம், கலைப்பீடம், விஞ்ஞானபீடம், விவசாயபீடம், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடம், மருத்துவ பீடம், இந்துக்கற்கைள் பீடம், சேர். பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைய வவுனியா வளாகத்தைச் சேர்ந்த வியாபாரக் கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞான பீடம் மற்றும் தொழில்நுட்பக் கற்கைகள் பீடங்களைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில், திறந்த மற்றும் தொலைக்கல்வி முறைமை மூலம் கற்கைநெறிகளைப் பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. 

ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் சீர்பெறும் விருதான பேராசிரியர் அழகையா துரைராசா தங்கப்பதக்கங்கள் வழங்கப்படவிருக்கின்றன. இதன்படி 2021ம் கல்வியாண்டுக்குரிய பல்கலைக்கழக அடிப்படையிலான தங்கப்பதக்கத்தைக் கலைப்பீடத்தைச் சேர்ந்த ஒருவர் பெற்றுக் கொள்கின்றார். 

பீடமட்டத்தில் 2022ம் கல்வியாண்டுக்குரிய தங்கப் பதக்கத்தைக் கலைப்பீடத்தில் இருந்து ஒருவரும், விஞ்ஞான பீடத்தில் இருந்து ஒருவரும் பெறுகிறார்கள். 

பீடமட்டத்தில் 2023ம் கல்வியாண்டுக்குரிய தங்கப் பதக்கத்தை முகாமைத்துக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் இருந்து ஒருவரும், மருத்துவ பீடத்தில் இருந்து ஒருவரும் பெறுகின்றனர்.

மேலும், 2022ம் கல்வியாண்டுக்குரிய தூய மற்றும் பிரயோக விஞ்ஞானத்தில் சிறந்த செயலாற்றுகைக்கான பேராசிரியர் கந்தையா குணரட்ணம் தங்கப்பதக்கத்தைப் பல்கலைக்கழக மட்டத்தில் இருந்து விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த ஒருவர் பெறவிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இப்பட்டமளிப்பு வைபவத்துக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் நிகழ்வுகளாக அமையும் நினைவுப் பேருரைகளான சேர். பொன் இராமநாதன் நினைவுப் பேருரை பங்குனி மாதம் 5ம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கும், சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரை அன்றே பிற்பகல் 4.00 மணிக்கும் இடம்பெறவிருக்கின்றது.

சேர். பொன் இராமநாதன் நினைவுப்பேருரையை ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் தொடர்பியல் துறையின் ஓய்வுபெற்ற துணைப் பேராசிரியர் நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா, “சமூக ஈடுபாட்டுடன் செயற்படும் பல்கலைக்கழகம்: ஆய்வு, உரையாடல் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு குறித்த ஆழ்ந்த சிந்தனைகள்” என்ற தலைப்பிலும், சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரையை யாழ்ப்பாணப்; பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் குழந்தை மருத்துவத் துறையைச் சேர்ந்த இருக்கைப் பேராசிரியர்; கீதாஞ்சலி சத்தியதாஸ் “அடுத்த தலைமுறையைப் பேணிப் பாதுகாப்பது: குழந்தைகள் ஆரோக்கியம் குறித்த சமகாலக் கண்ணோட்டங்கள்” என்ற தலைப்பிலும் நிகழ்த்தவிருக்கின்றனர். இந் நிகழ்வுகளுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40வது பொதுப் பட்டமளிப்பு வைபவம் இனிதே நிறைவு பெறும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 50 ஆண்டுகளை நிறைவு செய்து பயணிக்கும் வேளையில், 40ஆவது பட்டமளிப்பு விழா இடம்பெற இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். 

No comments