இலங்கையில் தங்கியிருந்து வெளிநாட்டு நிறுவனங்களுக்காகப் பணியாற்றும் தொழில் வல்லுநர்களுக்காகப் புதிய டிஜிட்டல் நோமட் விசா (Digital Nomad Visa - DNV) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகப் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க அறிவித்துள்ளார்.
இலங்கையை நீண்டகாலம் தங்கியிருந்து பணியாற்றும் ஒரு இடமாக மாற்றுவதும், சுற்றுலா மற்றும் அறிவுப் பரிமாற்றத்தை மேம்படுத்துவதுமே இதன் முக்கிய நோக்கமாகும்.
18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வெளிநாட்டவர்கள், அவர்களின் துணைவர் மற்றும் சார்ந்திருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இலங்கைக்கு வெளியே உள்ள நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், சுயதொழில் செய்பவர்கள் (Freelancers) அல்லது வெளிநாட்டில் வணிகம் நடத்துபவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் மாதம் குறைந்தது 2,000 அமெரிக்க டொலரை வருமானமாகப் பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும் இந்த விசா ஓராண்டு செல்லுபடியாகும் என்பதுடன், ஆண்டுதோறும் புதுப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தங்கியிருக்கவும், வங்கிக் கணக்குகளை ஆரம்பிக்கவும், சொத்துக்களை வாடகைக்கு எடுக்கவும், பிள்ளைகளைப் பாடசாலைகளில் சேர்க்கவும் இந்த விசா அனுமதிக்கிறது.
அத்துடன் பிரதான விண்ணப்பதாரர் மற்றும் அவரை சார்ந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் தலா 500 அமெரிக்க டொலர் ஆண்டுக் கட்டணமாக வசூலிக்கப்படும்.
இதனைப் பெறுவதற்குக் கடவுச்சீட்டு, மருத்துவச் சான்றிதழ், காவல்துறை நற்சான்றிதழ், வருமானச் சான்று மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பரிந்துரை ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த விசா வைத்திருப்பவர்கள் இலங்கைக்குள் உள்ளூர் நிறுவனங்களில் பணிபுரிய முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதுடன் விதிமுறைகளை மீறினால் விசா ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







No comments