Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சுரேஷ் சலே கைது - தேவைப்படின் மேலதிக தடுப்பு காவல் உத்தரவையும் பெறுவோம்


அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் தலைமையகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில், மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஜீவ மெதவத்த மற்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜாலிய சேனாரத்ன ஆகியோர் இது குறித்த மேலதிக விவரங்களை வெளியிட்டனர்.

2019 உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அண்மையில் கிடைத்துள்ள புதிய மற்றும் வலுவான சாட்சியங்களின் அடிப்படையிலேயே சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார்.

"இச்சம்பவம் குறித்து மிக நீண்ட மற்றும் ஆழமான விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது. இதன் காரணமாகக் கைதுக்கான முழுமையான காரணங்களை இப்போதே பகிரங்கப்படுத்த முடியாது" என்று சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஜீவ மெதவத்த குறிப்பிட்டார்.

"பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தற்காலிக விதிகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதால், அவரை 72 மணிநேரம் (3 நாட்கள்) தடுத்து வைத்து விசாரணை செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு கிடைத்துள்ளது. விசாரணைகளின் முன்னேற்றம் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில், தேவைப்படின் மேலதிக தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுக்கொள்ளவும் சட்டத்தில் இடமுண்டு." - என்று பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜாலிய சேனாரத்ன விளக்கமளித்தார்.

சுரேஷ் சலேயிடம் முன்னெடுக்கப்படும் தீவிர விசாரணைகளின் ஊடாக, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னணியில் இருந்த உண்மையான சூத்திரதாரிகள் மற்றும் அதன் மறைமுகத் தொடர்புகள் குறித்த இரகசியங்களை வெளிப்படுத்த முடியும் எனப் பொலிஸ் தரப்பு பலமான நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

சுரேஷ் சலே கைது செய்யப்பட்ட விதம் குறித்து சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ள விமர்சனங்களுக்குப் பதிலளித்த சஜீவ மெதவத்த,

"அவரை நாம் கைது செய்யாமல் இருந்திருந்தால்தான் பொலிஸாருக்கு எதிராக விமர்சனங்களும் பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். பொலிஸார் தமது கடமையைச் சட்டத்திற்கு உட்பட்டுச் சரியாகச் செய்துள்ளனர்" என்று குறிப்பிட்டார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசேட குழுவொன்று சுரேஷ் சலேயிடம் வாக்குமூலங்களைப் பெற்று வருவதுடன், தாக்குதல் தொடர்பான கோப்புகளுடன் அவரது தொடர்புகளை ஒப்பிட்டு மீளாய்வு செய்து வருகின்றது. இந்த விசாரணை முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

No comments