தனது கணவனை களவு குற்றச்சாட்டொன்றில் கைது செய்து போதைப்பொருள் வழக்கில் கைது செய்ததாக பொலிஸார் குற்றம் சாட்டுகின்றனர் எனவும், கைது செய்யப்பட்டவர் மீது சித்திரவதைகளை புரிந்துள்ளதாகவும் மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.
அது குறித்து மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்திலும் முறைப்பாடு அளித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவரின் மனைவி தெரிவிக்கையில்,
கடந்த 14ஆம் திகதி வீடு ஒன்றில் களவு ஒன்று இடம் பெற்றதாக அது தொடர்பில் விசாரிக்க வேண்டும் என எனது கணவர் உள்ளிட்ட மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் இருவரின் கைது விவரம் தொடர்பில் குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்ட போதும் எனது கணவர் தொடர்பில் பொலிசார் தகவல் வழங்க மறுத்தனர்.
பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்ததாக மூன்று நாட்களின் பின் 17ஆம் திகதியே அறிந்து அங்கு சென்ற போது, எனது கணவர் மீது போலீசார் சித்திரவதை மேற்கொண்டு தாக்குதல்களையும் மேற்கொண்டதால், உடலில் இரத்த தழும்புகள் காணப்படுவதுடன் அவர் எழுந்து நடக்க முடியாத நிலையில் காணப்பட்டார்.
என்ன குற்றச்சாட்டில் எனது கணவரை கைது செய்தீர்கள் ? என கேட்ட போது, களவு குற்றச்சாட்டு என பதில் அளித்தனர்.
எங்கே களவு போனது ? களவு போனமை தொடர்பிலான முறைப்பாடு உள்ளதா ? 14ஆம் திகதி கைது செய்த கணவனை 17ஆம் திகதியே கைது செய்துள்ளதாக என்னிடம் கூறியுள்ளீர்கள் ? மூன்று நாட்களாக எனது கணவர் தொடர்பிலான தகவல்களை ஏன் கூறவில்லை என பொலிசாரிடம் தொடர்ந்து கேள்வி கேட்ட போது , கணவரின் உடைமையில் இருந்து ஐஸ் போதைப்பொருளை மீட்டோம். வேறு எதுவும் கதைக்க வேண்டும் எனில் நீதிமன்றில் கதை என என்னை பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.
பின்னர் நேற்றைய தினம் பருத்தித்துறை நீதிமன்றில் ஐஸ் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தார் என குற்றம் சாட்டி முற்படுத்தினர் வழக்கினை விசாரித்த நீதிமன்றம் அவரை விளக்கமறியலில் வைத்துள்ளது.
இந்த நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை குறித்த விடயம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளேன் என மேலும் தெரிவித்தார்







No comments