முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றவாளிகளாகக் காணப்பட்ட 12 பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மேல் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் இன்றைய தினம் புதன்கிழமை இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளது.
குறித்த படுகொலைச் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்புக்காக, பிரதிவாதிகள் அனைவரும் இன்று கம்பஹா மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். இதன்போதே நீதிபதிகள் இந்தத் தீர்ப்பை வாசித்தனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற வன்முறைகளின் போது, நிட்டம்புவ பிரதேசத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் ஆகியோர் அடித்துக் கொலை செய்யப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரினால் 42 பிரதிவாதிகளுக்கு எதிராகக் கம்பஹா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஜனவரி 14 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தீர்ப்புக்காக இன்றைய தினம் திகதியிடப்பட்ட நிலையில் 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.







No comments