ஒருவரின் விலைமதிப்பற்ற சிந்தனையும், உயர்ந்த கருத்துகளும், நற்பண்பான நடத்தைகளும் சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும் என்பதற்கான அருமையான எடுத்துக்காட்டாக டாக்டர் பிரேமகிருஷ்ணா அவர்கள் திகழ்கிறார்.
இலங்கை வரைபடத்தில் இயற்கை அழகும் மரங்களும் சூழ்ந்திருக்கும் பகுதி சாவகச்சேரி. அப்பகுதியில் வாழும் மக்கள் சுறுசுறுப்பானவர்களாகவும், பல்வேறு தொழில் முயற்சிகளில் ஈடுபடும் தன்மையுடையவர்களாகவும் உள்ளனர். யாழ்ப்பாணம் நோக்கி வரும் பிரதான சாலையின் இருபுறங்களிலும் வாழும் மக்கள், கல்வி, தொழில் முயற்சி, அரசு சேவை, புலம்பெயர் சமூக உதவி போன்ற துறைகளில் சிறந்து விளங்கி தமிழர் சமூகத்திற்கு நற்பெயர் பெற்றுத் தந்துள்ளனர். சமுதாயத்தை கட்டியெழுப்புவதிலும் அவர்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளனர்.
அவ்வாறான சிறப்புமிக்க சூழலில், சுந்தரலிங்கம் – புனிதவதி தம்பதியருக்கு புதல்வராகப் பிறந்தவர் டாக்டர் பிரேமகிருஷ்ணா. அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 18 ஆண்டுகள் மயக்க மருந்து விசேட வைத்திய நிபுணராகப் பணியாற்றி இன்று ஓய்வு பெறுகிறார்.
அவரது வைத்திய சேவையின் மேம்பாட்டிற்காக செய்த பணிகளை ஒரு கணம் நினைவு கூருவது மிகவும் முக்கியமானது. அது பலருக்கும் ஒரு சிறந்த படிப்பினையாக இருக்கும்.
டாக்டர் பிரேமகிருஷ்ணா அவர்கள் தமது முழுப் பள்ளிக் கல்வியையும் பெருமைக்குரிய சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் பயின்றார். பள்ளிக் காலத்தில் அமைதியான மாணவராக இருந்தாலும், பல்வேறு பள்ளி நிகழ்வுகளில் பங்கேற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தார். ஒழுக்கம், ஒற்றுமை மற்றும் பொறுப்புணர்வு ஆகிய பண்புகளை வளர்த்துக் கொள்ள அந்தப் பள்ளியின் பங்கு அளப்பரியது.
1980களில் ஈழநாடு பத்திரிகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு ஐந்து மாடிக் கட்டிடம் கட்டப்படும் என்ற செய்தி வெளியாகியது. அப்போது பள்ளி மாணவராக இருந்த டாக்டர் பிரேம் அதை அறிந்து அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார். அதேபோல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) தொடங்கப்படும் என்ற செய்தியும் அவரை மேலும் உற்சாகப்படுத்தியது.
பின்னர் அவர் யாழ்ப்பாண மருத்துவ பீடத்தில் சேர்ந்து 1986 முதல் 1993 வரை தனது மருத்துவக் கல்வியைத் தொடர்ந்தார். அந்த காலம் மிகவும் சவாலானதாக இருந்தது. குறிப்பாக 1990களில் மின்சாரம் இல்லாமை, போக்குவரத்து சிரமம் போன்ற பல பிரச்சினைகள் இருந்தன. குறைந்த வளங்களுடனேயே கல்வி மேற்கொள்ள வேண்டிய சூழல் இருந்தது. இருந்தாலும் அவர் சக மாணவர்களுடன் நல்ல நட்புறவை பேணியதுடன், எப்போதும் அனைவருக்கும் ஆலோசனை வழங்கும் ஒருவராக இருந்தார்.
1990களின் நடுப்பகுதியில் சமாதான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து மீண்டும் போர் தொடங்கியது. வடபகுதிக்கான போக்குவரத்து கடுமையான கட்டுப்பாடுகளை சந்தித்தது. மக்கள் தாண்டிக்குளம், பின்னர் நொச்சிமோட்டை, அதன் பின்னர் ஓமந்தை சோதனைச் சாவடிகள் வழியாக அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் சென்று வர வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த காலத்தில் பலர் துரதிஷ்டவசமாக உயிரிழந்தனர். வடபகுதி மக்களின் மனநிலை மிகுந்த பாதிப்புக்குள்ளானது.
அந்தக் காலத்தில் பேராசிரியர் தயா சோமசுந்தரம், டாக்டர் சிவயோகன், மறைந்த மதிப்பு மிக்க குழந்தை சண்முகலிங்கம் உள்ளிட்டோரின் ஒழுங்குபடுத்தலில் “அன்னை இட்ட தீ” என்ற நாடகம் மேடையேற்றப்பட்டது. அந்த நாடகத்தில் டாக்டர் பிரேமகிருஷ்ணா அவர்களும் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த நாடகம் அக்காலத்தில் நிலவிய சமூக மற்றும் உளவியல் பிரச்சினைகளை ஆழமாக எடுத்துக் காட்டியது. அதை பார்த்த பலர் இறுதியில் கண்ணீர் மல்கிய நிலையில் இருந்தனர்.
மருத்துவக் கல்வியை முடித்த பிறகு அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உள்ளகப் பயிற்சியை மேற்கொண்டார். அந்த காலத்தில் டாக்டர் ஆனந்தராஜா மற்றும் பேராசிரியர் சிவசூரியாவின் வழிகாட்டுதலின் கீழ் அவர் பயிற்சி பெற்றார். அவர்களின் வழிகாட்டுதல் டாக்டர் பிரேமகிருஷ்ணாவை திறமையான வைத்தியராக உருவாக்கியது.
பின்னர் பேராதனை வைத்தியசாலையில் மயக்க மருந்து பிரிவில் பணியாற்றினார். அதன் பின்னர் மயக்க மருந்துவியலில் பட்டமேற்படிப்பு பயிற்சிக்காக கொழும்பில் பயிற்சி மேற்கொண்டார். அவர் MD Anaesthesiology and Critical Care பட்டத்தை வெற்றிகரமாக பெற்றார்.
அதன் பின்னர் வெளிநாட்டு மேம்பட்ட பயிற்சிக்காக இரண்டு ஆண்டுகள் சிங்கப்பூரில் பயின்று, அங்கும் சிறப்பாகப் பயிற்சி முடித்தார். பின்னர் மீண்டும் இலங்கை திரும்பி தனது சேவையைத் தொடர்ந்தார்.
2008ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மயக்க மருந்து விசேட வைத்திய நிபுணராக பொறுப்பேற்றார். அக்காலத்தில் வைத்தியசாலை பல்வேறு வளக் குறைபாடுகளை எதிர்கொண்டிருந்தது. இருந்தாலும் அவர் மயக்க மருந்து பிரிவை ஒழுங்குபடுத்தி, குழு ஒருமைப்பாட்டுடன் செயல்படும் ஒரு வலுவான அணியை உருவாக்கினார். பயிற்சி நிகழ்ச்சிகள், கலந்துரையாடல்கள் ஆகியவற்றின் மூலம் அந்தப் பிரிவை மேம்படுத்தினார்.
சத்திர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான மயக்க மருந்து சேவையை வழங்குவதில் அவர் மிக முக்கிய பங்காற்றினார். சத்திர சிகிச்சைக் கூடம் சிறப்பாக இயங்குவதற்கான அவரது தலைமைத்துவமும் வழிகாட்டுதலும் அனைவராலும் பாராட்டப்பட்டது.
வைத்தியசாலையில் பணிபுரியும் அனைத்து தரப்பினரிடமும் அவர் எப்போதும் மரியாதையுடனும் அன்புடனும் நடந்துகொண்டார். நோயாளிகளின் நலனே முதன்மை என்ற எண்ணத்தை அனைவரிடமும் வலியுறுத்தி வந்தார்.
வைத்தியசாலை நலன்புரிச் சங்கத்தின் பொருளாளராகப் பணியாற்றிய காலத்தில் அந்த அமைப்பை ஒழுங்குபடுத்தி பல்வேறு உதவி திட்டங்களை அறிமுகப்படுத்தினார். தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் பல சேவைகளை நோயாளிகளுக்கு வழங்கினார்.
அவரது காலத்தில் ஆஸ்பத்திரி வீதியில் ஒரு வீடு பெற்று, தொலைதூரத்திலிருந்து வரும் நோயாளிகளின் உறவினர்கள் இலவசமாக தங்குவதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டது. இது பலருக்கும் பெரும் நன்மையாக அமைந்தது.
வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார சேவை உதவியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் டாக்டர் பிரேமகிருஷ்ணா அவர்களை மிகுந்த மரியாதையுடன் நினைவுகூருகின்றனர்.
அவர் எப்போதும் நேர்மை, ஒழுக்கம் மற்றும் நீதிக்காக குரல் கொடுத்தவர்.
ஒவ்வொரு நாளும் காலை 7.30 மணிக்கே வைத்தியசாலைக்கு வந்து பணியைத் தொடங்குவது அவரது வழக்கம். சத்திர சிகிச்சைகள் காலை 8 மணிக்கே ஆரம்பிக்க வேண்டும் என்ற ஒழுங்கை உருவாக்கியவர்களில் ஒருவராகவும் அவர் திகழ்கிறார்.
இன்று அவர் ஓய்வு பெறுகிறார். ஆனால் அவரது அனுபவமும் வழிகாட்டுதலும் இனியும் இந்த வைத்தியசாலைக்கு கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
அவரது ஓய்வு காலம் ஆரோக்கியமாகவும் அமைதியாகவும் அமைய எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.













No comments