மண்டைதீவு புதைகுழி வழக்கு மேலதிக விசாரணைக்காக எதிர்வரும் ஜூலை 28ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது.
1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 மற்றும் 26 ஆகிய நாள்களில் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளில் பாரிய மனிதப் படுகொலை நிகழ்த்தப்பட்டது. இதன்போது 80 இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 45 இகும் அதிகமான உடலங்கள் மண்டைதீவு 2 ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருப்பதுடன் அதற்கான வாழும் சாட்சியங்கள் உறுதியாகவும் இருக்கின்றன. அதேபோன்று அதற்கு அயலில் உள்ள பாடசாலை கிணறு ஒன்றுக்குள்ளும் உடலங்கள் இருக்கின்றன.
எனவே குறித்த கிணற்றை அகழ்ந்து உடலங்களை வெளிக்கொணர்ந்து உண்மைகள் வெளி உலகுக்கு வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த செப்டெம்பர் மாதம் தனது மகனை பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் ஊர்காவத்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த நிலையில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் , இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த வழக்கு மன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன் பொது பொலிஸார் சில சமர்ப்பனங்கள் செய்த நிலையில் மேலதிக அறிக்கைகளை சமர்ப்பிக்க உத்தரவிட்ட மன்று வழக்கினை எதிர்வரும் ஜூலை 28ஆம் திகதிக்கு தவணையிட்டுள்ளது.
இன்றைய வழக்கு விசாரணைகளின் போது, காணாமல் போனோர் அலுவலகத்தின் சட்டத்தரணி பூர்ணி மரியநாயகம் மற்றும் அதன் பிராந்திய இணைப்பாளர் த.செல்வக்குமார், ஆகியோருடன் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோரும் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.







No comments