Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வடக்கில் மணல் மற்றும் கிரவல் விநியோகம் - மாவட்ட செயலர்கள் தலைமையிலான விசேட குழுக்கள் ஊடாக அனுமதி


வடக்கு மாகாணத்தில் மணல் மற்றும் கிரவல் விலைகளைக் கட்டுப்படுத்தி ஒரே சீராகப் பேணுவதற்கும், மக்களின் தேவைக்கேற்ற விநியோகத்தை தடையின்றி வழங்குவதற்குமான புதிய பொறிமுறையொன்றை உருவாக்கும் நோக்கிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

மணல் மற்றும் கிரவல் விநியோகத்தில் வடக்கு மாகாணத்தில் தற்போது எழுந்துள்ள சவால்கள் தொடர்பில் நேரில் ஆராய்ந்து தீர்வுகாண்பதற்காக, ஆளுநரால் விடுக்கப்பட்ட விசேட அழைப்பை ஏற்று, புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் சமன் ஜெயசிங்க இக்கலந்துரையாடலில் விசேடமாகப் பங்கேற்றிருந்தார்.

இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர் நா.வேதநாயகன், 

'மணல் மாபியாக்களின் கட்டுப்பாடற்ற செயற்பாடுகளால் மாகாணத்தில் மணல் விலை மிகக் கடுமையாக அதிகரித்துச் செல்கின்றது. இந்த ஆண்டு வடக்கு மாகாணத்தில் பெருமளவிலான வீட்டுத் திட்டங்கள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்நிலையில், சாதாரண மக்கள் தங்களின் நாளாந்தத் தேவைகளுக்குக் கூட மணலைப் பெற்றுக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.

இதனைக் கட்டுப்படுத்துவதற்குப் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் வடக்கு மாகாண அலுவலகத்திடமிருந்து போதிய ஒத்துழைப்புகள் கிடைக்கப்பெறவில்லை. 

திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு மணல் எடுத்து வருவதற்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொண்டு, நடைமுறையில் கிளிநொச்சியிலிருந்து சட்டவிரோதமாக அகழப்படும் மணலையே அந்த அனுமதிப்பத்திரத்தைப் பயன்படுத்தி ஏற்றி வருகின்றனர்.

மேலும், அரச நிறுவனங்கள் ஊடாக மணல் விநியோகிப்பதற்கான அனுமதிப்பத்திரங்களுக்கு விண்ணப்பித்தால் அதற்குக் காலதாமதம் ஏற்படுகின்றது. ஆனால், தனிநபர்களுக்குப் பணியகத்தால் உடனடியாக அனுமதிகள் வழங்கப்படுகின்றன. இந்த நடைமுறைகள் முற்றாக மாற்றியமைக்கப்பட வேண்டும். மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் விசேட குழுக்களை அமைத்து, அக்குழுக்களின் ஊடாகவே இனி அனுமதிகளை வழங்கும் நடைமுறை உருவாக்கப்பட வேண்டும்,' என ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

No comments