Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தையிட்டி விகாரை காணி அளவீடு செய்யும் பணிகளை நிறுத்துங்கள்!


தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்யும் பணிகளை உடனடியாக நிறுத்தி , குறித்த காணி உரிமையாளர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு அழைத்துக்  கலந்துரையாடிய பின்னர், காணி உரிமையாளர்களது விருப்பத்தின் அடிப்படையில், வெளிப்படையான எழுத்து மூலமான இணக்கப்பாடு எட்டப்பட்டு காணி விடுவிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாவட்ட செயலரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளார்.

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை நாளைய தினம் செவ்வாய்க்கிழமை அளவீடு செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பணிகளை இடைநிறுத்துமாறு கோரி மாவட்ட செயலருக்கு , நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அனுப்பிய கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

 “தையிட்டிப் பகுதியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்டுள்ள காணி அளவீடு தொடர்பான ஆட்சேபனை”  என்னும் தலைப்பில் தங்களுக்கு முகவரியிட்டு எனக்கும் பிரதியிட்டு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பாக தங்களது விசேட கவனம் ஈர்க்கப்படுகின்றது.  

மேற்படி காணிகளை விடுவிக்க வேண்டுமென கடந்த 17 ஆண்டுகளாக காணி உரிமையாளர்கள் கோரிவந்துள்ள நிலையில், கடந்த மூன்று வருடங்களாக வீதியிலிருந்து போராடிவருகின்றார்கள் என்பதும் தாங்கள்  அறிந்ததே.

  இக்காணிகளை விடுவிப்பது தொடர்பில் காணி உரித்து நிர்ணய திணைக்களம் ஊடாக அளவீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக காணி உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இச்செயற்பாடு காணி உரிமையாளர்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் அவர்கள் காணி உரித்து நிர்ணய திணைக்களம் ஊடாக அளவீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுவதனை நிராகரிப்பதாகவும் காணி உரிமையாளர்கள் தமது கடிதத்தில் ஆணித்தரமாக குறிப்பிட்டுள்ளார்கள். 

குறித்த விடயம் தொடர்பிலான ஆட்சேபனைக் கடிதம் காணி உரிமையாளர்களால் கடந்த 22.04.2026 அன்று தங்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அவர்களது கடிதம் தொடர்பில் மாவட்டச் செயலாளராகிய தாங்கள் எந்தவிதமான அக்கறையும் செலுத்தாத நிலையில், அவர்களது கோரிக்கைக்கு மாறாக நேற்று முன்தினம் 23.04.2026 வலி வடக்கு பிரதேச செயலாளருக்கு தாங்களால் வழங்கப்பட்ட அறிவுத்தல்களின் பிரகாரம், குறித்த காணிகளை 28.04.2026 அன்று காலை 8.00 மணிக்கு அளவீடு செய்வது தொடர்பான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

காணி உரிமையாளர்களுக்கு பிரதேச செயலாளரால் அனுப்பப்படும் கடிதம் தபால் மூலம் சென்றடைவதற்கான போதிய கால அவகாசம் எதுவும் வழங்கப்படாமலே,   தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டு கடிதங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தபட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது. 

வெவ்வேறு இடங்களில் வசிப்பவர்களுக்கு உரிய கால அவகாசம் வழங்காமல், நடைமுறைகளுக்கு மாறாக காணி உரிமையாளர்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படடு அவசரமாக  அளவீட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமையானது, காணி உரிமையாளர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பங்களையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

காணிகளை விடுவிப்பது தொடர்பான வழமையான நடைமுறைகளுக்கு மாறாக இக்காணிகளை விடுவிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட அணுகுமுறை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்முடன் எந்தவிதமான கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.  

கடந்த 36 ஆண்டுகளுக்கு மேலாக காணி உரிமையாளர்கள் தமது காணிகளுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. காணிகளது வேலிகள், அங்கிருந்த மரங்கள், கட்டடங்கள் உள்ளிட்ட அனைத்து அடையாளங்களும் அழிக்கப்பட்டு, புதிய கட்டுமானங்கள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்நிலையில் திடீரென காணி உரிமையாளர்களை அழைத்து எல்லைகளைக் காண்பிக்குமாறு கோருவது நியாயமற்ற செயற்பாடு என்றும், காணி உரிமையாளர்களுக்கு திட்டமிட்டு பாதிப்பை ஏற்படுத்தும் முயற்சியாகுமெனவும் காணி உரிமையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளார்கள்.  

காணிகளது எல்லைகள் சிதைக்கப்பட்டுள்ள நிலையில், காணிக்கு உரித்தான பெற்றோர் பலர் உயிருடன் இல்லாத நிலையில் அவர்களது பிள்ளைகளால்;  36 வருடங்களின் பின்னர் திடீரென காணி உரித்து நிர்ணய  திணைக்களத்திற்கு காணிகளது எல்லைகளை உடனடியாகக் காண்பிப்பது சிரமமான விடயமாகும்.  

இந்நிலையில், கடந்த 17 ஆண்டுகளாக ஸ்ரீலங்கா ஆயுதப் படைகளது பிடியிலிருந்த காணிகள் அவ்வப்போது விடுவிக்கப்பட்ட பின்னர், மக்கள் தமக்கிடையேயும் காணி தொடர்பான உறவினர்கள் மற்றும் விடயம் தெரிந்தவர்களுடனும் கலந்துரையாடி, எல்லைகளைக் காண்பித்து அளவீடுகளைச் செய்து தமது காணிகளை உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.

 அந்தச் சந்தர்ப்பங்களில் காணி உரித்து நிர்ணய திணைக்களம் அதில் தலையீடு செய்திருக்கவில்லை. காணி உரித்து நிர்ணய திணைக்களத்தின் தலையீடின்றிய அதே  நடைமுறைகளைப் பின்பற்றியே தமது காணிகளையும் விடுவிக்க வேண்டுமென இக் காணிகளது உரிமையாளர்கள் தொடர்ந்தும் வலியுறுத்திவருகின்றார்கள். 

எனினும் அவர்களது நியாயமான கோரிக்கைகள் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டு அவர்களது விருப்பத்திற்கு மாறாகக் காணி உரித்து நிர்ணய திணைக்களமூடாக காணிகளை அளவீடு செய்ய முற்படுவதானது பாரிய சந்தேகத்தினை  தோற்றுவித்துள்ளது.  

மேலும் குறித்த காணி அளவீடு தொடர்பாக  வலிகாமம் வடக்கு பிரதேச செயலரினால் காணி உரிமையாளர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், “யாழ்ப்பாண திஸ்ஸ விகாரை தொடர்பான காணிப் பிணக்குகளுக்கு தீர்வு காண்பதற்காக திட்டமிடப்பட்டுள்ள அளவீட்டு நடவடிக்கை தொடர்பானது” என்று தலைப்பிடப்பட்டுள்ளது. 

இவ்வாறு தலைப்பிட்டதன் மூலமாக குறிதத விகாரையானது சட்டவிரோதமானது என்ற உண்மை திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளதுடன், காணி உரித்து நிர்ணய திணைக்களம் ஊடாக அளவீடு  செய்து விடுவித்தல் என்னும் பெயரில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையானது, சட்டவிரோத விகாரைக்கு காணிகளைக் கையகப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியே என்ற சந்தேகத்தினையும் வலுப்படுத்துகின்றது. 

எனவே இம் முயற்சியை  உடனடியாக நிறுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன். 

மேலும் குறித்த சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளும் வகையில், குறித்த காணி உரிமையாளர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு அழைத்துக்  கலந்துரையாடிய பின்னர், காணி உரிமையாளர்களது விருப்பத்தின் அடிப்படையில், வெளிப்படையான எழுத்து மூலமான இணக்கப்பாடு எட்டப்பட்டு காணி விடுவிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


No comments