Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கிளிநொச்சியில் இ.போ.ச சாரதியுடன் முரண்பட்ட நடத்துனருக்கு காலவரையற்ற பணித்தடை.


கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்துச் சபை சாரதியுடன் பாரதூரமான முறையில் முரண்பட்ட தனியார் பேருந்து நடத்துநர் ஒருவருக்கு, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையால் காலவரையற்ற பணித்தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார். 

குறித்த நடத்துநர் இ.போ.ச. சாரதியுடன் முரண்படும் காணொலி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டிருந்தது. 

துரிதமாகச் செயற்பட்ட வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை, காணொலியை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை ஆரம்பித்தது. ஆரம்பக்கட்ட விசாரணைகளில் குறித்த நடத்துநரின் ஒழுங்கீனமான செயற்பாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், சர்ச்சைக்குரிய நடத்துநருக்குக் காலவரையற்ற பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இக்காலப்பகுதியில், அவர் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினூடாக வழியனுமதிப் பத்திரம் பெற்றுக்கொள்ளப்பட்ட எந்தவொரு பேருந்திலும் பணியாற்றுவதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பேருந்தின் வழியனுமதிப் பத்திரமானது இரண்டு தினங்களுக்குச் செல்லுபடியற்றதாகும் வகையில் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்தின்போது பயணிகள் சேவையில் ஈடுபடும் தரப்பினரிடையே ஏற்படும் இவ்வாறான ஒழுக்க மீறல்கள், வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் செயற்பாடுகள், மேலதிக கட்டணம் அறவிடப்படுதல் அல்லது பயணிகள் வேறு ஏதேனும் அசௌகரியங்களை எதிர்கொண்டால், எவ்வித தயக்கமுமின்றித் தகுந்த ஆதாரங்களுடன் (பயணச்சீட்டு, ஒளிப்படங்கள் அல்லது காணொலிகள்) 071 9090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்குப் பொதுமக்கள் உடனடியாகத் தெரியப்படுத்த முடியும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.


No comments