வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் செயற்பாடுகளின்றி காணப்படுகின்ற சனசமூக நிலையங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தி, அவற்றினை வினைத்திறனாக செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈ.பி.டி.பி. பிரதேச சபை உறுப்பினர் பாலசுப்பிரமணியம் ஸ்ரீதரன், சனசமூக நிலையங்கள் போன்ற சமூக அமைப்புக்களின் செயற்பாடுகளில் இளைஞர்களை ஊக்குவிப்பதன் மூலம் அவர்கள் வழிதவறிப் போவதனை தடுக்க முடியும் எனவும் வலியுறுத்தினார்.
அதேவேளை சபையில் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற விடயங்கள் காலதாமதம் இன்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. அதுவே மக்களுக்கும் ஆரோக்கியமானதாக இருக்கும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
வலிகாம் வடக்கு பிரதேச சபையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற 11 ஆவது அமர்வின்போது,
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் பா. ஸ்ரீதரனினால் குறித்த விடயங்கள் முன்வைக்கப்பட்டன. அங்கு அவர் தொடர்ந்து கருத்துக்களை முன்வைக்கையில்,
'வலி வடக்கு பிரதேசத்தில் நீண்டகாலமாக பல சனசமூக நிலையங்க இயங்காமல்இ கூட்டங்கள் நடதத்தப்படாமல் இருப்பதாக மக்களால் முறையிடப்படுகின்றது. அவ்வாறு இருக்கின்ற சனசமூக நிலையங்களை மீள கூட்டங்களை போட்டு இயங்க வைப்பதற்கு சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சன சமூக நிலையங்கள் சிறப்பாக செயற்பட்டு அவற்றில் இளைஞர்கள் ஆர்வமுடன் செயற்படுகின்ற சூழலை உருவாக்குவதன் மூலம், வழிதவறாத – சமூக அக்கறை கொண்ட ஆரோக்கியமான இளைஞர் சமுதாயத்தினை உருவாக்க முடியும். அதுதொடர்பாக சபை விசேட கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன்.
அதேபோன்று, எமது பிரதேசததின் தூய்மையை பேணும் வகையில் அனைத்து பிரதேசங்களிலும் பொருத்தமான இடங்களை அடையாளப்படுத்தி குப்பைத்தொட்டிகளை அமைக்க வேண்டும் என்றும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் இந்த சபையிலே பிரேரணை முன்வைத்திருந்தேன்.
இதுவரையில் அதுதொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டதாக தெரியில்லை. சபையில் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற விடயங்கள் காலதாமதம் இன்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. அதுவே மக்களுக்கும் ஆரோக்கியமானதாக இருக்கும்.
அதைவிட சேந்தாங்குளம் பிரதேசத்தில் தனியார் காணிக்குள் செயற்பட்டு வருகின்ற கோழிக்கடை உரிய அனுமதிகள் இன்றி செயற்பட்டு வருதாகவும் பிரதேச மக்களினால் எமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவை தொடர்பிலும் ஆராயப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றேன் என தெரிவித்தார்.









No comments