மானிப்பாய் பழைய பொதுச்சந்தை வளாகத்தில் புதிதாக நவீன கடைத்தொகுதிகள் அமைக்கும் முன்மொழிவு திட்டத்தில் மானிப்பாய் நகர வர்த்தக சங்கத்தின்,ஆலோசனை பங்களிப்புகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் அ.ஜோன் ஜிப்பிரிக்கோ வலியுறுத்தியுள்ளார்.
அது தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
மானிப்பாய் பழைய பொதுச்சந்தை அமைந்துள்ள இடமென்பது அப்பகுதியின் பொருளாதார மையப்புள்ளியாகும்.
தற்போது மானிப்பாய் பிரதேச சபையால் முன்மொழியப்பட்டுள்ள புதிய கட்டிட நிர்மாணப் பணிகளை, எதிர்காலச் சந்ததியினரின் தேவைகளையும், வர்த்தகர்களின் நாளாந்த நடைமுறைச் சிக்கல்களையும் கருத்தில் கொண்டு தூரநோக்குடன் திட்டமிட்டு அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
புதிய கடைத்தொகுதி அமைப்பது தொடர்பான முன்மொழிவிற்கான திட்டமிடல் மட்டத்திலேயே மானிப்பாய் நகர வர்த்தக சங்கத்தினரை உள்ளடக்கி, அல்லது மானிப்பாய் நகர வர்த்தகர்களின் ஆலோசனைகளைக் கேட்டறிந்து. திட்டத்தை சரிவர முன்மொழிந்து எதிர்கால கட்டிட பணிகளை முன்னெடுப்பதன் ஊடாகவே, நடைமுறைச் சிக்கல்கள் இல்லாத ஒரு நவீன கடைத்தொகுதி கட்டிட வளாகத்தை உருவாக்க முடியும்.
வர்த்தகர்களின் ஆலோசனைகளைப் கேளாது அல்லது பெறப்படாது புறக்கணித்து , கள யதார்த்தம் அறியாது முன்னெடுக்கப்படும் எந்தவொரு கட்டுமானமும், எதிர்காலத்தில் வர்த்தக நடவடிக்கைகளில் பல்வேறு சிரமங்களையும், நிர்வாக முரண்பாடுகளையும் ஏற்படுத்தக்கூடும்.
எனவே, பொறுப்புவாய்ந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் , பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் இவ்விடயத்தில் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும்.
திட்டமிடல் குழுவில் மானிப்பாய் வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகளை உள்ளடக்கி ஒரு 'ஆலோசனைச் சபை'யை உடனடியாக உருவாக்குதல்.
தற்போது தயார் செய்யப்பட்டுள்ள கட்டட வரைபடங்களை கட்டிடம் அமையவுள்ள வளாகத்தில் காட்சிப்படுத்தி வர்த்தக சங்கத்திடம் முன்வைத்து, அவர்களின் ஆலோசனைகளைக் கோருதல்.
கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக வர்த்தக சங்கப் பிரதிநிதிகளுடன் ஒரு கூட்டுக்கலந்துரையாடலை நடத்தி, அவர்களின் பரிந்துரைகளை பெற்று எதிர்கால திட்ட முன்மொழிவுகளுக்காக வேண்டி ஆவணப்படுத்துதல்.
போன்ற நடவடிக்கைகள் ஊடாக இத்திட்டம், அனைவரின் கூட்டு முயற்சியுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் அமையும்.
இது பிரதேச சபையின் நற்பெயருக்கும், சமூகத்தின் வளர்ச்சிக்கும் வலுசேர்க்கும் என நான் நம்புகிறேன்.
மானிப்பாய் நகரில் தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ளநவீனசந்தை கட்டிடம் அமைக்கப்பட்டுள்ள காணியின் ஒரு பகுதியை பிரதேசசபைக்கென கொள்வனவு செய்து அன்பளிப்பு செய்தவர்கள் அன்றைய மானிப்பாய் நகர வர்த்தக சங்கத்தினர் என்பதனை இவ்விடத்திலே ஞாபகப்படுத்த விரும்புகிறேன்
ஆகவே வர்த்தகசங்கத்தின் ஆலோசனைகளை இவ் அபிவிருத்தி திட்டத்தில் பெறுவதே பிரதேச அபிவிருத்திக்கான சமூகபங்களிப்பையும் ஊக்கிவிக்கும் "மேலும் நவீன கடைத்தொகுதியுடன் வளர்ச்சியடைந்து வரும் நகரக்கட்டமைப்புடைய பகுதியாக மானிப்பாய் விளங்குவதால் ஒரு பேரூந்துகள் தரித்து நின்று செல்ல கூடிய ஒரு பேரூந்து தரிப்பிட வசதியையும் நவீன கடைத்தொகுதி முன்மொழிவுடன் இணைத்து திட்டமிடுவது சிறப்பானதாகவும் மானிப்பாய் நகர வளர்ச்சிக்கான தூரநோக்கான திட்டமிடலாகவும் அமையும் என இவ்அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்










No comments