Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

உலக பௌத்த மகா மாநாட்டை நவம்பர் மாதம் இலங்கையில் நடத்த திட்டம்


மகா சங்கத்தினர் சங்க சமூகத்தை ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் பேணிச் செல்வதற்குத் தேவையான சட்டங்களை விரைவில் தயாரித்து வழங்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மாத்தறை, திஹகொட மிதெல்லவல புராதன ரஜமஹா விகாரையில் நடைபெற்ற '2570 ஆவது ஸ்ரீ புத்த ஆண்டு அரச வெசாக் விழாவின்' ஆரம்ப நிகழ்வில் முதன்மை அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டில் நிலையான பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு மத மறுமலர்ச்சி இன்றியமையாததாகும். உன்னத புத்த சாசனத்தையும் தர்மத்தையும் எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாப்பதற்காக, நமக்குள்ள பொறுப்புக்களைச் சரியாக இனங்கண்டு கைகோர்ப்பதே இந்த வெசாக் புண்ணிய தினத்தில் நாம் எடுக்கக்கூடிய சிறந்த உறுதிமொழியாகும்.

நாம் ஆன்மிக ரீதியாக வீழ்ச்சியடையும் போதெல்லாம் அதற்கு இணையாகப் பொருளாதார ரீதியாகவும், பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடையும் போது ஆன்மிக ரீதியாகவும் வீழ்ச்சியடைந்திருக்கின்றோம் என்பதே நமது வரலாறு. எனவே, தார்மீக நெறிகளைப் பின்பற்றும் ஒரு சமூகத்திற்குள் மட்டுமே நம்மால் செழிப்பான பொருளாதார எழுச்சியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

2334 ஆண்டுகள் என்ற நீண்ட காலப்பகுதியாகப் பௌத்த தர்மம் இலங்கையில் அழியாமல் நிலைத்திருப்பதற்குக் காரண - காரியக் கோட்பாடும், எமது மகா சங்கத்தினரின் அர்ப்பணிப்புமே முக்கிய காரணங்களாகும். இன்று தர்மத்தின் பெயராலேயே தர்மம் சிதைக்கப்படும் மற்றும் ஒழுக்க நெறிகள் வீழ்ச்சியடையும் சந்தர்ப்பங்களை நாம் பார்க்கின்றோம்.

மூன்று நிகாயங்களைச் சேர்ந்த மகா சங்கத்தினரின் எழுத்துப்பூர்வக் கோரிக்கைக்கு இணங்க, விகாரைகள் மற்றும் தேவாலகம் சட்டத்தின் 41 மற்றும் 42 ஆம் பிரிவுகளைத் திருத்துவதற்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது. மகா சங்கத்தினர் சங்க சமூகத்தை ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் பேணிச் செல்வதற்கும், தர்ம நீதிமன்ற அதிகாரங்களை வழங்குவதற்கும் தேவையான சட்ட மூலங்களை விரைவில் தயாரித்து வழங்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதத்தில் உலக பௌத்த மகா மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இது நமது நாட்டின் மத எழுச்சியில் ஒரு பாரிய புத்துணர்ச்சியூட்டும் சந்தர்ப்பமாக அமையும். போதைப்பொருள் உள்ளிட்ட சமூகப் பேரழிவுகளிலிருந்து இளைய தலைமுறையினரைக் காப்பாற்றி, அறநெறி சார்ந்த நாட்டை நோக்கிக் கொண்டுசெல்ல அனைத்து மதத் தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும்." - என்று ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

அதிநவீன தொழில்நுட்பத்துடன் மாத்தறையில் வெசாக் வலயம்: "தக்ஷினா பிரபா" எனும் பெயரில் "அபித்தரேத கல்யாணே" எனும் தொனிப்பொருளின் கீழ், தேசிய வெசாக் வாரத்திற்கு இணைந்ததாக நேற்று முதல் ஜூன் 01 ஆம் திகதி வரை மாத்தறை நகரத்தை மையமாகக் கொண்டு அரச வெசாக் விழா நடைபெறுகின்றது.

இந்த வெசாக் வலயத்தினுள் புனித தந்ததாது கண்காட்சி, தர்ம போதனைகள், அன்னதான நிகழ்வுகள், பிரம்மாண்டமான தோரணங்கள் மற்றும் பக்திப் பாடல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விசேட அம்சமாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வானில் தோன்றும் பௌத்த சின்னங்களைக் காட்சிப்படுத்தும் நவீன தொழில்நுட்பக் காட்சியும், எல்.ஈ.டி. திரைகள் மற்றும் பொம்மலாட்டக் கலை மூலம் ஜாதக கதைகளை டிஜிட்டல் முறையில் காட்சிப்படுத்தும் வடிவங்களும் அமையவுள்ளன.

தேசிய வெசாக் விழாவையொட்டி இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

அத்துடன், 2570 ஆவது அரச வெசாக் விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறப்பு நினைவு முத்திரையின் முதல் தபால்தலை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன், தென் மாகாணத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சில வழிபாட்டுத் தலங்களுக்கான புனித பூமி காணிப் பத்திரங்களும் ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டன.

மகாநாயக்க தேரர்கள், தாய்லாந்து மற்றும் வியட்நாம் பௌத்த நாடுகளின் தூதுக்குழுவினர், ஏனைய மதத் தலைவர்கள், அமைச்சர்களான கலாநிதி ஹினிதும சுனில் செனவி, பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன, சுனில் ஹந்துன்னெத்தி, சரோஜா சாவித்திரி போல்ராஜ், பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, தென் மாகாண ஆளுநர், வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் முப்படைகளின் பிரதானிகள் உட்படப் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

No comments