காலி - கொழும்பு பிரதான வீதியின் பயாகல, கட்டுகுருந்த பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 62 வயதுடைய மூதாட்டியும், அவரது 12 வயது பேரனும் உயிரிழந்துள்ளனர்.
தனியார் பேருந்தொன்றும் முச்சக்கரவண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பேருவளையில் நடைபெற்ற பொசன் மத வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்றுவிட்டு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் முச்சக்கரவண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த 62 வயதுடைய பெண்ணும், அவரது 12 வயது பேரனும் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிறுவனின் தாத்தாவே முச்சக்கரவண்டியை செலுத்தியிருந்தார். அவர் பலத்த காயங்களுடன் களுத்துறை போதனா வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன.
கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று, களுத்துறை கட்டுகுருந்த பிரதான பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டு மீண்டும் பயணத்தை ஆரம்பித்த போது, எதிரே வந்த முச்சக்கரவண்டி திடீரென பஸ்ஸின் முன்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகும் காட்சி பஸ்ஸின் முன்பக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த கெமராவில் பதிவாகியிருந்தது.
முச்சக்கரவண்டியை செலுத்தியவருக்கு நித்திரை ஏற்பட்டமையினாலேயே இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதனிடையே, விபத்து நடந்த தருணத்தில் பேருந்தில் பயணித்த ஒருவர், பேருந்து சாரதியின் அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் இருந்த பையை திருடிச் சென்ற சம்பவமும் பதிவாகியுள்ளது.
இந்த திருட்டுச் சம்பவம் பஸ்ஸில் இருந்த சிசிடிவி (CCTV) கமராவில் பதிவாகியுள்ளது.
இந்த விபத்து மற்றும் திருட்டுச் சம்பவம் தொடர்பாக பயாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.









No comments