யாழ்ப்பாணம் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் காணப்படும் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கான நிரந்தர பாதையை விடுவிக்கவும் , தினமும் காலை முதல் இரவு 10 மணி வரையில் ஆலயத்திற்கு சென்று வழிபட இராணுவ தரப்பினர் இணக்கம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி பலாலியில் இருந்து மக்கள் வெளியேறி இருந்தனர். அதனை தொடர்ந்து, கடந்த 35 வருட காலத்திற்கு மேலாக அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள நிலையில் , கடந்த ஆண்டு ஜூன் மாதமளவில் குறித்த பகுதியில் உள்ள ஆலயத்திற்கு மாத்திரம் செல்வதற்கு என உயர் பாதுகாப்பு வலயத்தினுள் தனியார் காணிகள் மற்றும் வைரவர் ஆலய காணி ஆகியவற்றின் ஊடாக பிரத்தியோக பாதை அமைக்கப்பட்டு , மக்கள் ஆலயத்திற்கு மாத்திரம் சென்று வழிபாட்டு திரும்ப இராணுவத்தினர் அனுமதி வழங்கி இருந்தனர்.
இந்நிலையில் , ஆலயத்திற்கு தினமும் சென்று வழிபடவும் , ஆலயத்திற்கு செல்லும் வீதியின் நடுவே இராணுவத்தினரின் வாகன திருத்தகம் (கராஜ்) காணப்படுவதனாலையே ஆலயத்திற்கு செல்ல தற்காலிக வீதி அமைக்கப்பட்டதாகவும் , அதனால் , இராணுவத்தினரின் வாகன திருத்தகத்தை அப்புறப்படுத்தி ஆலயத்திற்கு செல்லும் நிரந்தர வீதியினை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல்வேறு தரப்பினரிடமும் கோரி வந்தனர்.
இந்நிலையில் , கடந்த மாதம் யாழ்ப்பாணம் வருகை தந்த பாதுகாப்பு அமைச்சின் பிரதி அமைச்சரிடமும் வீதி விடுவிப்பு தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் , தற்போது இராணுவத்தினர் வீதியை விடுவிக்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட இராணுவ தளபதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனுக்கும் இடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே , நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முதல் இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்லும் நிரந்தர வீதியினை விடுவிப்பதாகவும் , ஆலயத்திற்கு காலை முதல் இரவு 10 மணி வரையில் பக்தர்கள் சென்று வழிபாடு நடாத்த அனுமதிப்பதாகவும் இராணுவ தளபதி நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்துள்ளார்.





.jpeg)



No comments