உண்மை, நீதி, இழப்பீட்டு நடவடிக்கைகள் மற்றும் மீண்டும் நிகழாமைக்கான உத்தரவாதத்தைத் தேடும் பயணத்தில், பாதிக்கப்பட்டவர்கள் நாள்தோறும் பல சவால்களையும் தடைகளையும் எதிர்கொள்கின்றனர். காணாமல் ஆக்கப்பட்ட தனது குழந்தை எங்கே இருக்கிறது என்பதை அறியாமலேயே எந்தவொரு தாயும் உயிரிழக்கக் கூடாது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐ.நா. நிபுணர் அனா லொரேனா டெல்கடில்லோ பெரெஸ் தெரிவித்தார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற “நீதிக்கான நீள் பயணம் ” என்ற சர்வதேச மாநாட்டில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
வலிந்து காணாமல் ஆக்கப்படுவது, ஒரு மனிதனுக்கு எதிராக இழைக்கப்படக்கூடிய மிகக் கொடூரமான குற்றங்களில் ஒன்றாக இதனைக் கருதி, இக்குற்றத்தை முடிவுக்குக் கொண்டுவர நாடுகள் முன்வர வேண்டும்.
இதுவரை, எங்களது மனிதநேய ஆணையின் கீழ் 61 நாடுகளிலிருந்து 626க்கும் அதிகமான வழக்குகளை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதில் மிக முக்கியமான பங்காற்றும் சிவில் சமூக அமைப்புகளின் ஒத்துழைப்பு எமக்கு எப்போதும் கிடைத்து வருகின்றது.
முறையான ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் இருந்தபோதிலும், அரசு அதிகாரிகளால் இத்தகைய காணாமல் ஆக்கப்படுதல்கள் மறுக்கப்படுவதை நாம் எதிர்கொள்கிறோம்.
செயற்பாட்டாளர்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள், ஊடகவியலாளர்கள், அரசின் எதிர்ப்பாளர்கள் அல்லது சந்தேகிக்கப்படும் ஆதரவாளர்கள், இன மற்றும் மத சிறுபான்மையினர், மனிதக் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் எல்லைப் பகுதிகளில் இடம்பெயர்ந்து தப்பிச் செல்பவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதற்கு இலக்காகியுள்ளது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு வருகை தந்துள்ள தாய்மார்களே, பயனுள்ள தேடுதல் நடவடிக்கைகள், முறையான விசாரணைகள் மற்றும் உண்மையைக் வெளிக்கொணர்தல் இல்லாத காரணத்தால் நீங்கள் அனுபவித்து வரும் அனைத்து துயரங்களையும் நாங்கள் அறிவோம்.
ஒவ்வொரு நாளும் உங்களுக்கு முதல் நாளைப் போலவே இருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். ஏனெனில், காணாமல் போன முதல் நாளில் இருந்த அதே வலியும் துயரமும் இன்றும் அப்படியே இருக்கிறது.
இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு இதுவரை எந்தவொரு இறுதிப் புள்ளியும் இல்லை. இருப்பினும், இந்த துயரத்தின் பாரிய அளவைக் காண முடிகிறது. எங்களது பணிக்குழு மட்டும் இதுவரை 12,000-க்கும் அதிகமான வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
இவற்றில் பெரும்பாலான வழக்குகள் 1980-கள் மற்றும் 1990-களின் ஆரம்பத்தில் 'ஜே.வி.பி' எனக் குறிப்பிடப்படும் மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சியுடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய சிங்கள இளைஞர்கள், அரசுப் பாதுகாப்புப் படைகளால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களோடு தொடர்புடையவை ஆகும்.
அரசுப் பாதுகாப்புப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டல்கள், தனிச்சச்சையான தடுப்புக்காவல்கள், சித்திரவதைகள் மற்றும் நீதிக்கு புறம்பான படுகொலைகளை பணிக்குழு ஆவணப்படுத்தியுள்ளது.
மேலும், அரசு அதிகாரிகளுக்கு எதிரான பொறுப்புக்கூறல் மற்றும் நீதித்துறை நடவடிக்கைகளின் இன்மை ஆகியவை இழைக்கப்பட்ட மீறல்களின் முதன்மை காரணியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
எங்களால் பரிசீலிக்கப்பட்டு அனுப்பப்பட்ட கணிசமான எண்ணிக்கையிலான வழக்குகள், அரசுப் படைகளுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையே நடந்த ஆயுத மோதலின் போது தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவை. இந்த ஆயுத மோதல் 2009 மே மாதத்தில் முடிவுக்கு வந்தது.
பரவலான மற்றும் திட்டமிட்ட வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்களுக்கு மேலாக, 'வெள்ளை வேன்' காணாமல் ஆக்கப்படுதல்கள், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் பின்னணியில் காணாமல் ஆக்கப்படுதல்கள், பணயத் தொகை அல்லது பொருளாதார இலக்குகளுக்காகக் காணாமல் ஆக்கப்படுதல்கள் போன்ற வேறு வடிவங்களிலான காணாமல் ஆக்கப்படுதல்களும் இடம்பெற்றுள்ளன.
புலிகள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஆட்கடத்தல்களையும் பணிக்குழு அங்கீகரித்துள்ளது. இவை வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கு ஒப்பான கடுமையான குற்றங்களாகும். இக்குற்றங்கள் தொடர்பாகவும் சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப முழுமையாக விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
தமிழீழ விடுதலைப் புலிகளால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு நீதி உறுதி செய்யப்பட வேண்டும்.
உண்மை, நீதி, இழப்பீட்டு நடவடிக்கைகள் மற்றும் மீண்டும் நிகழாமைக்கான உத்தரவாதத்தைத் தேடும் பயணத்தில், பாதிக்கப்பட்டவர்கள் நாள்தோறும் பல சவால்களையும் தடைகளையும் எதிர்கொள்கின்றனர் என்பதை நாம் அறிவோம்.
அவர்கள் தனிப்பட்ட அச்சுறுத்தல்கள், நிதி மற்றும் உணர்வுரீதியான சுமைகளை எதிர்கொள்வதோடு, வாழ்வாதார நிலைமைகளின் சீரழிவையும் சகித்துக் கொள்கின்றனர்.
எந்தவொரு தகவலும் கிடைக்காமலேயே பல தமிழ் தாய்மார்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என்பதை நான் கேட்டறிந்தேன். காணாமல் ஆக்கப்பட்ட தனது குழந்தை எங்கே இருக்கிறது என்பதை அறியாமலேயே எந்தவொரு தாயும் உயிரிழக்கக் கூடாது.
நாள்தோறும் சந்திக்கும் சவால்களுக்கு மத்தியில், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மறக்கப்படுவதை அனுமதிக்க மறுத்து, உறவினர்களும் உயிர் பிழைத்தவர்களும் போராடி வருகின்றனர். சிலர் தனியாகப் போராடுகிறார்கள் என்பதை நாம் அறிவோம்.
ஆனால், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகளை உருவாக்குவது அவர்களை மேலும் வலுப்படுத்துகிறது என்றார்









No comments