Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கௌரவத்தைக் குலைக்கும் உயர் அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு வன்மையான கண்டனம்


வடக்கு மாகாண சபையில் பணிபுரியும் உயர்நிலை உத்தியோகத்தர்கள் சிலர், இலங்கையின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் (Development Officers) குறித்து அவதூறான மற்றும் தொழில் ரீதியாகத் தரம் தாழ்ந்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகக் கூறப்படும் குரல் ஆவணம் தற்போது சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவி அரச சேவையாளர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் அ. ஜோன் ஜிப்பிரிக்கோ தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும், அரச நிர்வாக கட்டமைப்பின் முறைகேடுகளுக்கும் தீர்வுகாண வேண்டிய பிரதான பொறுப்பில் உள்ள உயர் அதிகாரிகள், அத்தகைய பிரச்சினைகளைத் தீர்க்கத் திறனற்றவர்களாகத் தங்களது கடமையையும் தகுதியையும் மீளாய்வு செய்ய வேண்டிய நிலையில், சக ஊழியர்களை ஏளனம் செய்து பேசியிருப்பது ஏற்புடையதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவரது அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியத் தொழிலுக்குத் தகுதியற்றவர்கள் என்றும், புகைப்படம் எடுக்கும் வேலைக்கு மட்டுமே அவர்கள் சரிவருவார்கள் என்றும், அரசாங்கத்திற்கு அவர்கள் நட்டம் விளைவிப்பவர்கள் என்றும் உயர் அதிகாரிகள் ஏளனமாகப் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

கிராமிய மட்டம் தொடங்கி சகலதுறைகளிலும் நாட்டின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுக்காகத் தங்களது உழைப்பைக் கொட்டும் பல்லாயிரக்கணக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் (DO) உழைப்பை இழிவுபடுத்துவதை, அவர்களின் சக அபிவிருத்தி உத்தியோகத்தனாகப் பணியாற்றி வருபவன் நான் என்கிற அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியாது.

மிகை நியமனங்களை வழங்கி அரச நிதியைத் துஷ்பிரயோகம் செய்தது முந்தைய அரசாங்கமா அல்லது பொதுமக்களின் வரிப்பணத்தில் சம்பளம் மற்றும் சலுகைகளை பெற்றுக்கொண்டு அலுவலகங்களில் அமர்ந்து கொண்டு சக ஊழியர்களைத் தரம் தாழ்த்திப் பேசும் இந்த உயர் அதிகாரிகளா என்ற நியாயமான கேள்வி இப்போது எழுந்துள்ளதுடன்

நாடளாவிய ரீதியில் சேவையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழில் கௌரவத்திற்குப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதோடு, அவர்களின் தகைமைகள் மதிக்கப்படுவதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை மத்திய அரசாங்கமும் வடக்கு மாகாண ஆளுநரும் விடுக்க வேண்டும் என்பதுடன் தன்மானம் மற்றும் தொழில் கௌரவம் என்பது எந்தவொரு அரச ஊழியருக்கும் அவசியமானது. சக ஊழியர்களைக் கேவலப்படுத்திப் பேசும் அதிகாரத் திமிர் கொண்டவர்கள் தொடர்ந்தும் அதே பதவிகளில் நீடிப்பது அரச சேவைக்கே ஆபத்தானது. 

குரல் பதிவிற்குரிய அதிகாரிகள் மீது உரிய தாபன ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதுடன், குரல் பதிவிற்குரிய உயர் அதிகாரிகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்குரிய உத்தியோகத்தர்கள் அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பை கோர வேண்டும்." என குறிப்பிட்டப்பட்டுள்ளது.

No comments