Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மன்னாரில் மூன்று நாட்கள் நடைபெற்ற உலக சுற்றுலா தினக் கொண்டாட்டம்


மன்னார் மாவட்டத்தின் சுற்றுலாத்துறை ஆற்றல், இயற்கை வளங்கள், பண்பாட்டு மரபுகள் மற்றும் பாரம்பரியக் கலைகளை உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று நாள் உலக சுற்றுலா தினக் கொண்டாட்டத்தில்  ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

வடமாகாண சுற்றுலாப் பணியகம், மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் தொடர்புடைய அரச நிறுவனங்களின் ஒருங்கிணைப்பில் செப்டம்பர் 25 முதல் 27 ஆம் திகதி வரை இவ்விழா நடைபெற்றது. 

ஆரம்பத்தில் கீரி கடற்கரையில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த நிகழ்வுகள், சீரற்ற காலநிலை மற்றும் பலத்த காற்று காரணமாக மன்னார் உப்புக்குளம் அல்-பதாஹ் விளையாட்டு மைதானத்தில் முன்னெடுக்கப்பட்டன.

மூன்று நாட்களாக நடைபெற்ற இவ்விழாவில் பாரம்பரிய நடனங்கள், தற்காப்புக் கலை நிகழ்ச்சிகள், வில்லுப்பாட்டு, மாயாஜால நிகழ்ச்சிகள், குழுப் பாடல்கள், பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

அத்துடன், உள்ளூர் உணவுப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்களின் கண்காட்சிகளுடன் உணவுத் திருவிழாவும் நடைபெற்றது. 

விழாவின் மற்றுமொரு முக்கிய அம்சமாக, தலைமன்னாரிலிருந்து ஆதாம் பாலம் எனப்படும் இராமர் பாலத்துடன் தொடர்புடைய எட்டு மணல் திட்டுகளைப் பார்வையிடுவதற்கான புதிய சுற்றுலாப் படகுச் சேவையின் பரீட்சார்த்தப் பயணம் செப்டம்பர் முன்னெடுக்கப்பட்டது. 

அத்துடன், தலைமன்னார் கலங்கரை விளக்கைச் சூழவுள்ள பகுதிகளில் சுற்றுலாத்துறை சார்ந்த அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் நடைபெற்றது. 

இதன் ஒரு பகுதியாக, அப்பகுதியில் கடற்கரைப் பூங்கா ஒன்றை உருவாக்குவதற்கான திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தின் இயற்கை அழகு, வரலாற்று மரபுகள், பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் உள்ளூர் கைவினைப் பொருட்களை உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அறிமுகப்படுத்துவதற்கும், சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய உள்ளூர் தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதற்கும் இவ்விழா முக்கிய தளமாக அமைந்தது

வடமாகாண சுற்றுலாப் பணியகம், மன்னார் மாவட்டச் செயலகம், அரச திணைக்களங்கள் மற்றும் உள்ளூர் பங்குதாரர்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வு, மன்னார் மாவட்டத்தின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கும், உள்ளூர் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது







No comments