செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் செய்தி சேகரிக்க சென்றமைக்காக அரச ஊடகம் ஒன்றில் பணியாற்றிய யாழ்ப்பாண ஊடகவியலாளர் பணியிலிருந்து நிறுத்தப்பட்டிருக்கிறார். இதன்மூலம் காலத்துக்கு காலம் எப்படியான நெருக்கடிகள் இந்த ஊடகவியலாளர்கள் மீது தொடுக்கப்படுகின்றது என்பது புலனாகின்றது. ஆட்சிகள் மாறினாலும் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் என்பது தொடர்ந்துகொண்டே இருக்கிறது என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார்.
மறைந்த இளம் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாசின் 5ஆம் ஆண்டு நினைவுதினமானது யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கொண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
மறைந்த ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஷ் தனது உடலில் நோயினை தாங்கியவாறு இனத்தினுடைய வலிகளை கழைய வேண்டும் என்பதற்காக தன்னால் முடிந்தளவு உழைத்திருக்கின்றார்.
அவருடைய நினைவேந்தலை தொடர்ந்தும் யாழ் ஊடக அமையம் மேற்கொள்வது வரவேற்கதக்க விடையம். குறித்த ஊடகவியலாளருடைய நினைவு தினத்தில் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தொடர்பாக சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாக இருக்கும்.
நெருக்கடி மிகுந்த காலத்தில் பணியாற்றிய பல ஊடக ஜாம்பவான்கள் பலர் இன்று உயிரோடு இல்லை வெறுமனே புகைப்படங்களாகவே உள்ளார். முன்னைய காலங்களில் இவ்வாறான நெருக்கடிகள் இருந்திருக்கின்றன.
ஆனால் இந்த நெருக்கடிகள் அனைத்திற்கும் நாங்கள் தீர்வை கொடுப்போம் என மக்களை நம்ப வைத்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தியினர் முன்னர் இருந்ததை விட நெருக்கடி மிகுந்த சூழ்நிலைக்குள் ஊடகவியலாளர்களை தள்ளியிருக்கிறார்கள்.
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் செய்தி சேகரிக்க சென்றமைக்காக அரச ஊடகம் ஒன்றில் பணியாற்றிய யாழ்ப்பாண ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சன் பணியிலிருந்து நிறுத்தப்பட்டிருக்கிறார்.
காலத்துக்கு காலம் எப்படியான நெருக்கடிகள் இந்த ஊடகவியலாளர் மீது தொடுக்கப்படுகின்றது என்பது இதிலிருந்து புலனாகின்றது. காலத்திற்கு காலம் ஆட்சிகள் மாறினாலும் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் என்பது தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. அந்த அடக்குமுறைகளை வெளிப்படுத்துகின்ற ஊடகவியலாளர்கள் மீதும் அடக்குமுறைகள் தொடர்கதையாகவே உள்ளது, என்றார்.









No comments