நினைவு நாள்கள் அரசியல் மோதல்களுக்கான களமாக மாறக்கூடாது. அரசியல் வேறுபாடுகளைத் தாண்டிதியாகங்களை நினைவுகூருவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த சிலை யாழ்ப்பாண பொலிஸாரினால் , பெயர்த்து எடுத்து செல்லப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் , அது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்
மேலும் தெரிவிக்கையில்,
பல சூழ்ச்சிகளுக்கு மத்தியில் அரசியல் செய்ய வேண்டிய சூழ்நிலை இன்று உருவாகியுள்ளது.
அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த திலீபன் போன்ற ஒருவரின் நினைவை, அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தாமல், அவரது தியாகத்தையும் நினைவையும் மதிக்கும் வகையில் அணுகுவது அனைவரினதும் பொறுப்பாகும்.
திலீபன் நினைவு நாளை அரசியல் கட்சிகளுக்கு இடையிலான போட்டியாகவோ, முரண்பாடாகவோ மாற்றாமல், நிதானமாகவும் அமைதியாகவும் நடத்துவதற்கு அனைவரும் முயன்றிருக்க வேண்டும்.
அவ்வாறு நடந்திருந்தால், இன்றைய நிலைமையில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளைத் தவிர்த்திருக்க முடியும்.
மேலும், சிலை அகற்றப்படுவது தொடர்பாக முன்கூட்டியே தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தனவா என்ற கேள்வியும் தற்போது எழுகிறது.
சில அரசியல் தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் இந்த சந்தேகத்திற்கு இடமளிக்கின்றன.
எனக்கு மிகவும் கவலையளிக்கும் விடயம் ஒன்றுதான். பொலிஸார் தலையிடாமல் இருந்திருந்தால், நிலைமை இரு அரசியல் தரப்பினருக்கும் இடையிலான நேரடி மோதலாக மாறியிருக்கக்கூடிய சூழ்நிலையை நாம் பார்த்திருக்கலாம்.
நினைவு நாள்கள் அரசியல் மோதல்களுக்கான களமாக மாறக்கூடாது.தியாகங்களை நினைவுகூருவோம்.
அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி அமைதியைப் பாதுகாப்போம். மக்களின் உணர்வுகளை மதிப்போம் என தெரிவித்தார்.









No comments