காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச மாநாட்டின் மூலமாக எமக்கு இழைக்கப்படும் அநீதியின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியிருக்கின்றோம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போது இதனை தெரிவித்தனர்.
மேலும் தெரிவிக்கையில்,
இறுதிப் போர் வேளையிலும், அதற்கு முன்பும், அதற்குப் பின்பும் எமது பிள்ளைகள் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட நிலையிலும், இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டநிலையிலும், இராணுவத்தாலும், அவர்களோடு சேர்ந்தியங்கிய துணை ஆயுதக்குழுக்களாலும் கடத்திச்செல்லப்பட்டநிலையிலும் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.
அவ்வாறு காணாமலாக்கப்பட்ட நாள் தொட்டு தமது உறவுகளைத் தேடி அலையும் உறவினர்கள் இணைந்து, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தினை ஆரம்பித்தோம். 2017ஆம் ஆண்டு தொடக்கம் வடக்கு கிழக்கின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
இப்போராட்டங்களில், இராணுவத்திடம் கையளித்த எமது பிள்ளைகள் எங்கே? கடத்திச் செல்லப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? நீதித் துறையில் எமக்கு நம்பிக்கையில்லை, சர்வதேச விசாரணையே எமக்குத் தேவை, மீளநிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும், பொறுப்புக்கூறலை நோக்கி சர்வதேச நாடுகள் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களைத் தேடியறிவதற்கென அரசு அமைக்கும் ஆணைக்குழுக்கள், நிறுவனங்கள் ஏமாற்று நாடகங்கள் எனப் பல கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றோம்.
இராணுவத்தின் உயிர் அச்சுறுத்தல்கள், விசாரணைகள், கண்காணிப்புகள், வயது முதிர்வு, நோய், வறுமை போன்ற துயரங்களால் பாதிக்கப்பட்டபோதிலும் துவண்டுபோகாது - விட்டு விலகிவிடாது எமது போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றோம்.
இப்போராட்டமானது எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்கு மட்டுமானதல்ல, இனிவரும் காலங்களில் எமது பிள்ளைகளைப் போல இன்னொரு மகளோ, மகனோ கடத்திக் காணாமலாக்கப்படக்கூடாது என்பதற்கான ஓர் அரணாகவே நாம் எல்லாத் துயரங்களையும் தாங்கித் தெருவில் நிற்கின்றோம். இம்மண்ணில் எம்மைப் போல இன்னொரு தாய் கலங்கி நிற்கக்கூடாது என்பதற்காகவே மனவுறுதியோடு தொடர்ந்து போராடுகின்றோம்.
இந்நிலையில்தான் ஒவ்வொரு வருடமும் ஓகஸ்ட் 30ஆம் நாளாகிய சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான தினத்தில், வடக்கு கிழக்கின் தமிழ் தாய்மார்களாகிய நாம், மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்து வந்தோம். அப்போராட்டங்களில் எமது கோரிக்கைளை சர்வதேச சமூகத்திடம் வலியுறுத்திவந்தோம்.
இவ்வருடம் போராட்டத்தோடு இணைந்த வகையில் எமது கோரிக்கைளை இன்னும் வலுவாக முன்வைக்கும் பொருட்டு சர்வதேச மாநாடு ஒன்றினை நடாத்தினோம்.
அந்த மாநாட்டில் உலகத்திடம் நாம் எதனை எதிர்பார்க்கிறோம் என்பதனைப் பிரகடனமாக வெளியிட்டதோடு, எமது தொடர் போராட்டம் குறித்த தமிழ் சமூகத்தினதும், சர்வதேச சமூகத்தினதும் கரிசனையை கூட்டாக வெளிப்படுத்தினோம்.
இம்மாநாட்டில் கலந்துகொண்டிருந்த சர்வதேச பிரதிநிதிகள், சிறீலங்காவில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தமிழ் தாய்மார்கள் படுகின்ற இன்னல்களையும், நீதி மறுப்பையும், சர்வதேச நீதியைக் கோருவதற்கான நியாயத்தையும் விளங்கிக்கொண்டனர்.
அதனை வெளிப்படுத்தியுமுள்ளனர். அதேவேளை தமது பிள்ளைகளைத் தேடிய நீண்ட பயணத்தில் தாய் தந்தையர்கள் பலர் பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறியாமலே இறந்துபோய்விட்டனர்.
அவர்களின் நீதிக்கான தேடலை ஆவணப்படுத்தியதோடு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் நினைவாக அவர்களைத் தேடும் உறவினர்களிடம் எஞ்சியிருக்கும் நினைவுப் பொருள் நீதியைத் தேடும் போராட்டத்தில் பலமிக்க ஆயுதம் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளோம்.
இம்மாநாட்டின் மூலமாக எமக்கு சிறீலங்காவில் இழைக்கப்படும் அநீதியின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியிருக்கின்றோம். தமிழ் சமூகத்தை அழித்துவிட்டோம், தம் பிள்ளைகளைத் தேடியலையும் தாய்மார்களுக்குப் பதில் சொல்லாமல் மெல்லமெல்ல சாட்சிய அழிப்பை செய்துவருகின்றோம் என நினைத்துக்கொண்டிருந்த தரப்பினரின் முகத்தில் கரியைப் பூசியிருக்கின்றோம்.
திக்குமுக்காடச் செய்திருக்கின்றோம். இவர்களால் வீதியில் இறங்கிப் போராட மட்டும்தான் முடியும் என நம்பிக்கொண்டிருந்தவர்களின் எண்ணத்தைப் பொய்யாக்கியிருக்கின்றோம்.
ஆகவே இந்த சர்வதேச மாநாடு போராடும் தாய்மார்களாகிய எமக்கு மிகுந்த நம்பிக்கையைத் தந்திருக்கின்றது. தொடர் போராட்டம் காரணமாக சோர்வும், அயற்சியும், அடுத்து என்ன செய்வதென்பது தொடர்பான தேக்கமும் ஏற்பட்டிருந்தநிலையில் இம்மாநாடு புத்துணர்ச்சியைத் தந்திருக்கின்றது.
மாநாட்டுக்காகத் திரண்ட மக்கள் புதிய நம்பிக்கையைத் தந்திருக்கின்றார்கள். தமிழ் மக்கள் எப்போதும் எமக்கு ஆறுதலாக நிற்பார்கள் என்கிற உத்வேகத்தைத் தந்திருக்கிறார்கள்.
சிறீலங்காவின் ஜனநாயக வழிப் போராட்டத்தின் இறுதி வடிவமாக நீளும் நீதி கோரிய எமது நீண்ட பயணத்திற்கு உங்களின் தார்மீக உதவிகளும், ஆதரவுகளும் தொடர்ந்தும் கிடைக்கும் என்கின்ற நம்பிக்கையோடு அடுத்த தடத்தைப் பதிக்கின்றோம். எங்கள் கரங்களை இறுகப் பற்றிக்கொள்ளுங்கள் - என்றனர்.









No comments