Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கீரிமலையில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் அள்ளப்பட்டு விட்டனவாம்


கீரிமலையில் கொட்டப்பட்டிருந்த ஆபத்தான மருத்துவக் கழிவுகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் செயலாளர் அறிவித்துள்ளார்

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட கீரிமலையில் கொட்டப்பட்டிருந்த ஆபத்தான மருத்துவக் கழிவுகளை உடனடியாக அகற்றுமாறு வடக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலைத் தொடர்ந்து, குறித்த மருத்துவக் கழிவுகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு அறிவித்துள்ளார்.

கீரிமலையில் ஆபத்தான மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதுடன், அது தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகியிருந்தன. 

இதனையடுத்து, வடக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தால் நேற்றைய தினம் சனிக்கிழமை, குறித்த பகுதியில் கொட்டப்பட்டிருந்த ஆபத்தான மருத்துவக் கழிவுகளை அன்றைய தினத்துக்குள் அகற்றுமாறும், அவை தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் வலிகாமம் வடக்கு பிரதேச சபையிடம் கோரப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, குறித்த பகுதியில் கொட்டப்பட்டிருந்த மருத்துவக் கழிவுகள் அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டுள்ளதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு அறிவித்துள்ளார்.

சுகாதாரத் துறை சார்ந்த கழிவுகளை முறையற்ற வகையில் கையாளுதல் என்பது பொதுச் சுகாதாரத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதால், அவற்றை முறையான வகையில் சேகரித்து, பிரித்து, பாதுகாப்பாகக் கையாள்வதும் இறுதியாக உரிய முறையில் அகற்றுவதும் அவசியமானதாகும். இலங்கை சுகாதார அமைச்சின் தேசிய சுகாதாரக் கழிவு முகாமைத்துவத் திட்டமும், சுகாதாரக் கழிவுகளை முறையாகக் கையாளாதது நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் குறிப்பிடுவதுடன், கழிவுகளைப் பிரித்தல், பொதியிடுதல், கையாளுதல், சேமித்தல், சிகிச்சையளித்தல் மற்றும் அகற்றுதல் ஆகியவை முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது.

மேலும், சுகாதார நிலையங்களால் உருவாக்கப்படும் மருத்துவக் கழிவுகள் இறுதி அகற்றல் வரை முறையாக நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதும் சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments