தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களுக்கு வலி. வடக்கு மீள் குடியேற்ற குழு சங்கங்களை எதிர்வரும் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களுக்கு அழைக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது
தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ச. சிறிபவானந்தராசா தலைமையில் நடைபெற்றது.
அதன் போது வலி. வடக்கு மீள் குடியேற்ற குழு சங்க பிரதிநிதிகளை கூட்டங்களுக்கு அழைப்பதில்லை என மயிலிட்டி மீள் குடியேற்ற சங்கம் ஒன்றின் பிரதிநிதி குற்றம் சாட்டினார்.
அதற்கு , ஒருங்கிணைப்பு குழு தலைவர் , நீங்கள் வந்துள்ளீர்கள் தானே என கூறிய போது , தான் கிராம அபிவிருத்தி சங்கத்தின் சார்பில் வந்தேன் எனவும் , மீள் குடியேற்ற குழுக்களை கூட்டங்களுக்கு திட்டமிட்டு புறக்கணிப்பதாக குற்றம் சாட்டினார்
அதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் , மீள் குடியேற்ற குழுக்களை திட்டமிட்டு புறக்கணிப்பதாகவும் , அவர்கள் தமது காணிகளை விடுவிக்க கோரி கூட்டத்தில் குரல் கொடுத்தால் அவர்களின் மைக்கை பறித்து , அவர்களை மிரட்டும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் மீள்குடியேற்ற குழுக்களை கூட்டங்களுக்கு அழைக்க வேண்டும் என வலியுறுத்தினார்
அதனை அடுத்து எதிர்வரும் கூட்டங்களில் அவர்களை அழைப்பதாக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ச. சிறிபவானந்தராசா உறுதி அளித்தார்.
அதேவேளை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் தமது பிரதிநிதிகளையும் வழமையாக அழைத்து, காணி விடுவிப்பு உள்ளிட்ட தமது பிரச்சினைகள் தொடர்பில் கருத்துக்களை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டு வந்த நிலையில், அண்மையில் இடம்பெற்ற இரண்டு கூட்டங்களுக்கு தமது அமைப்பின் பிரதிநிதிகள் அழைக்கப்படவில்லை எனவும் எம்மை கூட்டங்களுக்கு அழைக்க வேண்டும் என கடந்த 11ஆம் திகதி வலி. வடக்கு மீள்குடியேற்ற குழு சங்க பிரதிநிதிகள் தெல்லிப்பழை பிரதேச செயலரிடம் மகஜர் கையளித்திருந்த போதிலும் , இன்றைய கூட்டத்திற்கு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.









No comments