யாழ்ப்பாண மாவட்டத்தில் அடிக்கடி வெள்ள அனர்த்தம் ஏற்படும் பகுதிகளை உள்ளடக்கி, அனர்த்த முன்னெச்சரிக்கை ஒத்திகை இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் அனர்த்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனின் ஒழுங்குபடுத்தலில் இந்த ஒத்திகை முன்னெடுக்கப்பட்டது.
தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம் தெற்கு, பாலாவி மற்றும் கொடிகாமம் மத்தி ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கி இந்நடவடிக்கை இடம்பெற்றது.
இதன்போது, கொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்பப் பாடசாலை மற்றும் கச்சாய் மகா வித்தியாலயம் ஆகியன பாதுகாப்பான இடைத்தங்கல் முகாம்களாக அடையாளப்படுத்தப்பட்டு, வெள்ள அனர்த்தத்தின்போது மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவது தொடர்பான ஒத்திகைகள் முன்னெடுக்கப்பட்டன.
தென்மராட்சி பிரதேச செயலாளர் F.C. சத்தியசோதி, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதில் உதவிப் பணிப்பாளர் என்.கே. அலகக்கோன், இராணுவத்தினர், பொலிஸார், பிரதேச சபை, சுகாதார சேவைப் பிரிவினர், தொண்டர் நிறுவனங்கள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு திணைக்களங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் மக்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பாக பிரதேச செயலாளரால் தெளிவுபடுத்தப்பட்டது. குறிப்பாக, உயிர்ப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, சிறுவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டவுடன், பொதுமக்கள் தாமதமின்றித் தமது பகுதிகளில் அடையாளப்படுத்தப்பட்ட பாதுகாப்பான இடைத்தங்கல் முகாம்களுக்குச் சென்று உயிரைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்த ஒத்திகையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றதுடன், வெள்ள அனர்த்தம் ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டனர். இவ்விரு பாடசாலைகளும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தால் அந்தப் பகுதிக்கான பாதுகாப்பான இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மழைக்காலத்தில் வெள்ள அனர்த்த அபாயம் அதிகரிக்கக்கூடிய நிலையில், ஏற்கனவே வெள்ளப் பாதிப்புகள் அதிகமாக ஏற்படும் பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒத்திகை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே, பொதுமக்கள் அனர்த்த முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களை அலட்சியம் செய்யாது, தமது உயிரையும் குடும்பத்தினரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்குத் தயாராக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


















No comments