கியூபாவின் முன்னாள் புரட்சித் தலைவரான பிடல் கஸ்ட்ரோவின் நூற்றாண்டு நினைவு விழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
‘பிடல் கஸ்ட்ரோ நூற்றாண்டு நினைவு விழா – 1926–2025’ என்ற தொனிப்பொருளில், யாழ்ப்பாணம் பொது நூலக மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கைக்கான கியூபா தூதுவர் பட்ரீசியா லசாரா பெகோ கூவேரா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் யாழ்ப்பாண மாநகர முதல்வர் மதிவதனி உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்
இதன்போது, பிடல் கஸ்ட்ரோவின் வரலாற்றையும் அவரது புரட்சிகரப் பயணத்தையும் எடுத்துரைக்கும் ‘சரித்திரம் என்னை நிரபராதியாக்கும்’ (History Will Absolve Me) என்ற ஆங்கில நூல், காஜத்திரி கணநாதபிள்ளையால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது.
தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட குறித்த நூலின் பிரதியை அதன் மொழிபெயர்ப்பாளர் காஜத்திரி கணநாதபிள்ளை, இலங்கைக்கான கியூபா தூதுவர் பட்ரீசியா லசாரா பெகோ கூவேராவிடம் வழங்கி வைத்தார்.
அத்துடன், பிடல் கஸ்ட்ரோ தொடர்பான நூல்களும் யாழ்ப்பாணம் பொது நூலகத்துக்கு வழங்கி வைக்கப்பட்டன.
கியூபாவின் அரசியல் வரலாற்றிலும் புரட்சிகர இயக்கத்திலும் முக்கிய இடம்பிடித்த பிடல் கஸ்ட்ரோவின் வாழ்க்கை வரலாறு, அரசியல் சிந்தனைகள் மற்றும் எழுத்துகளைத் தமிழ் வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்நிகழ்வு அமைந்தது.









No comments