யாழ்ப்பாண நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்து தான் இலங்கை போக்குவரத்து சபையின் நெடுந்தூர சேவையில் ஈடுபடும் பேருந்துகளும் சேவைகளை ஆரம்பிக்க வேண்டும் என நீதிமன்ற கட்டளையில் குறிப்பிடப்படவில்லை என்பதனை நாம் பொலிஸாருக்கு தெளிவு படுத்தியுள்ளோம் என யாழ்ப்பாண சாலை முகாமையாளர் பிரகலாதன் தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்து தமது சேவைகளை ஆரம்பிக்காத , இலங்கை போக்குவரத்து சபையினருக்கு எதிராக வடமாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலையத்தில் , நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை முறைப்பாடு செய்திருந்தார்.
குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , நேற்றைய தினம் புதன்கிழமை இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாண சாலை முகாமையாளரான பிரகலாதனை அழைத்து விசாரணைகளை முன்னெடுத்து அவரது வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டனர்
வாக்கு மூலங்களை வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,
நீதிமன்ற கட்டளைகளை நாங்கள் மீறவில்லை. இணைந்த நேர அட்டவணையில் செயற்படுமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. அந்த கட்டளைக்கு அமைவாக நாம் செயற்படுகின்றோம்.
கட்டளையில் , நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்து தான் சேவைகளை ஆரம்பிக்க வேண்டும் என குறிப்பிடவில்லை என்பதனை பொலிஸாருக்கு தெளிவாக எடுத்துக்கூறினேன்.
அத்துடன் இலங்கை போக்குவரத்து சபையின் 107 சாலைகளுக்கும் (டிப்போ) ஒரு தலைவர் இருக்கிறார். சாலை முகாமையாளர்களான நாம் , அவரின் அனுமதியின்றி எதனையும் செய்யமுடியாது என்பதனையும் பொலிஸாருக்கு தெளிவு படுத்தினேன் என தெரிவித்தார்.









No comments