Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வைத்தியசாலை வீதி போக்குவரத்து நெரிசலும் நெடுந்தூர பேருந்து நிலையத்தின் அவசியமும்



மயூரப்பிரியன் 

ஒரு நகரத்தின் தடையற்ற வளர்ச்சிக்கும் மக்களின் அன்றாட வாழ்வியலுக்கும் சீரான போக்குவரத்து அமைப்பே அடித்தளமாகும்.

அந்த வகையில், யாழ்ப்பாண நகர் மத்தியில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயணிகள் சேவையை நவீனப்படுத்தவும் , நகரில் இருந்து சுமார் 600 மீற்றர் தூர தொலைவில் நெடுந்தூரப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.

குறித்த பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு சுமார் 5 வருடங்கள் கடந்த நிலையிலும் அங்கிருந்து பேருந்து சேவைகள் இடம்பெறாத நிலையில் , யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் கட்டளைக்கு அமைவாக கடந்த செவ்வாய்க்கிழமை நான்காவது தடவையாக பேருந்து சேவைகள் அங்கிருந்து ஆரம்பிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

நான்காவது தடவையாக சேவைகள் ஆரம்பித்து வைக்கப்பட்ட போதிலும் , அங்கிருந்து இலங்கை போக்குவரத்து சபையினர் தாம் சேவையை ஆரம்பிக்க முடியாது என திட்டவட்டமாக கூறி நெடுந்தூர பேருந்து நிலையத்திற்கு செல்லவில்லை இதனால் நான்காவது தடவையாக சேவைகள் ஆரம்பிக்கப்பட்டும் அது முழுமையாக வெற்றியளிக்கவில்லை 

யாழ்ப்பாண நெடுந்தூர பேருந்து நிலையம் 

யாழ்ப்பாண நகர் மத்தி கடுமையான போக்குவரத்து நெரிசல்களில் சிக்கி தவிக்கிறது. குறிப்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அமைந்துள்ள "வைத்தியசாலை வீதி" கடுமையான போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியாக காணப்படுகிறது. 

வைத்தியசாலைக்கு அவசர நோயாளர்களை அழைத்து வரல் , நோயாளி காவு வண்டி (அம்புலன்ஸ்) விரைவான சேவைகளுக்கு தடைஏற்படுத்தல் போன்றவற்றில் வைத்தியசாலை வீதியில் காணப்படும் போக்குவரத்து நெரிசல்கள் காரணமாக அமைகிறது. 

அத்துடன் வைத்தியசாலையில் தங்கி நின்று சிகிச்சை பெரும் நோயாளிகளுக்கு வீதிகளில்  கனரக வாகனங்கள் , பேருந்துக்களின் போக்குவரத்து அவற்றின் அதீத இரைச்சல்கள் , என்பவற்றால் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். அமைதியான சூழலில் சிகிச்சை பெற முடியாத நிலையில் தவிக்கின்றனர். 

யாழ்.போதனா வைத்தியசாலை அதனை சூழவுள்ள நகர் பகுதிகளில் காணப்படும் போக்குவரத்து நெரிசல்களை குறைக்கும் முகமாக , போதனா வைத்தியசாலையை அண்டியுள்ள , இலங்கை போக்குவரத்து சபையினரின் மத்திய பேருந்து நிலையம் , அதனை ஒட்டியுள்ள தனியார் பேருந்து நிலையம் என்பவற்றில் , மாவட்டங்கள் , மாகாணங்கள் கடந்து நெடுந்தூரம், பயணிக்கும் பேருந்துகளை வீரசிங்கம் மண்டபத்திற்கு அருகில் அமைப்பது எனவும் , யாழ்பாணத்திற்குள் வரும் மற்றும் வெளிச்செல்லும் அனைத்து நெடுந்தூர பேருந்துகளும் , பிரதான வீதி வழியாக சேவையில் ஈடுபடும் என தீர்மானிக்கப்பட்டது 

அந்த பேருந்துகள் வைத்தியசாலை வீதிக்குள் உள்நுழைய தடை விதிப்பதன் ஊடாக வைத்தியசாலை வீதியின் போக்குவரத்து நெரிசல்களை குறைக்க முடியும் என 2013ஆம் ஆண்டு நெடுந்தூர பேருந்து நிலையத்தை அமைக்கும் யோசனை முன் வைக்கப்பட்டு , 2017ஆம் ஆண்டு வரையில் பல சுற்று பேச்சுக்கள் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.  

அதில் இலங்கை போக்குவரத்து சபையின் பிரதிநிதிகள் , தனியார் போக்குவரத்து   சங்கத்தினர் கலந்து கொண்டு தமது சம்மதங்களையும்  தெரிவித்தனர் 

அதன் அடிப்படையில் , 2017ஆம் ஆண்டு வீரசிங்கம் மண்டபத்திற்கு அருகில் உள்ள யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு ,நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டில் சுமார் 134 மில்லியன் ரூபாய் செலவில் அதன் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. 

சுமார் 4 ஆண்டு கட்டுமான பணிகளின் பின்னர் , 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் திகதி யாழ்.மாநகர சபையின் அப்போதைய முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தலைமையில் திறப்பு விழா இடம்பெற்றது. 

சேவையை ஆரம்பிக்க மாட்டோம் - இ.போ.ச 

குறித்த நெடுந்தூர பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பில் 2013ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான கால பகுதியில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் , கலந்துரையிடல்கள் என எங்கும் தாம் அங்கிருந்து சேவையை முன்னெடுக்க மாட்டோம் என இலங்கை போக்குவரத்து சபையினர் கூறியிருக்கவில்லை. அத்துடன் , 2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான பேருந்து நிலைய கட்டுமான கால பகுதியிலும் இ.போ.ச வினர் அது தொடர்பில் எதனையும் கூறவில்லை

2021ஆம் ஆண்டு ஜனவரி பேருந்து நிலையத்தை திறந்து வைத்த பின்னர் , அங்கிருந்து நெடுந்தூர சேவைகளை இணைந்த நேர அட்டவணையில் ஆரம்பிக்குமாறு இலங்கை போக்குவரத்து சபையினரையும் , தனியார் பேருந்து சங்கத்தினரையும் அழைத்த வேளை,  "எமக்கு என்று ஒரு பேருந்து நிலையம் இருக்கும் போது , நாம் வேறு எங்கிருந்தும் சேவைகளை ஆரம்பிக்க மாட்டோம்" என உறுதியாக கூறினார்கள். 

அதனை தொடந்து, இலங்கை போக்குவரத்து சபையினர் இங்கிருந்து சேவைகளை ஆரம்பித்தால் தான் , நாமும் இங்கிருந்து எமது சேவைகளை ஆரம்பிப்போம் என தனியார் பேருந்து சங்கத்தினரும் திட்டவட்டமாக கூறினார்கள். 

இரு தரப்பினரும் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து சேவைகளை ஆரம்பிக்கததால் , 134 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட பேருந்து நிலையம் கைவிடப்பட்டது. 

பேருந்து நிலையத்தில் இருந்து சேவைகள் இடம்பெறாததால் , அதனை சுற்றி கட்டப்பட்ட வர்த்தக நிலையங்களை பெற்றுக்கொள்ளவும் எவரும் முன் வரவில்லை. அதனால் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடிய நிலையில் காணப்படுகிறது. இதனால் மாநகர சபைக்கு கிடைக்க வேண்டிய பெரு வருவாய் கிடைக்காதுள்ளது 

மீள இயக்க கடும் பிரயத்தனங்கள் 

பொதுமக்களின் நலனுக்காகவும் , போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் 134 மில்லியன் மக்கள் வரி பணத்தில் நிர்மாணிக்கப்பட்ட பேருந்து நிலையம் இயங்காது கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதனை அடுத்து , இலங்கை போக்குவரத்து சபையினர் , தனியார் பேருந்து சங்கத்தினரை அழைத்து பல சுற்று பேச்சுக்கள் இடம்பெற்றன. 

"நாங்கள் அங்கே வர மாட்டோம்" என்று இ.போ.ச வினரும் , "அவர்கள் வந்தால் தான் நாங்கள் வருவோம்" என தனியார் பேருந்து சங்கத்தினரும்  கூறி வந்தனர். 

பல சுற்று பேச்சுக்கள் , அதிகாரிகளின் கடுமையான உத்தரவுகள் , சட்ட நடவடிக்கை எடுப்போம் போன்ற எச்சரிக்கைகள் எதனையும் இலங்கை போக்குவரத்து சபையினர் மதிக்கவே இல்லை. 

நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் என சேவை ஆரம்பிப்பு "மிக கோலாகலமாக" ஆரம்பிக்கப்பட்ட போதிலும் , இ.போ.ச வினர் வரவில்லை என தனியார் பேருந்து சங்கத்தினர் காரணம் கூறி மறுநாள் வராதமையால் , அங்கிருந்து தனியார் சேவைகள் ஆரம்பித்த மறுநாளே அவர்களும் மீண்டும் பழைய இடத்திற்கு சென்று விடுவார்கள். இவ்வாறாக மூன்று தடவைகள் "கோலகமான" திறப்பு விழாவை அடுத்து மறுநாளே சேவைகள் கைவிடப்பட்டுள்ளது.

நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் 

நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்து , நெடுந்தூர பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். இணைந்த நேர அட்டவணை தயாரிக்க வேண்டிய கடமை , மாகாண போக்குவரத்து அதிகார சபையினருக்கு உள்ள போதிலும் , அவர்கள் கடமையை செய்யவில்லை என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிமன்றில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கடந்த 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் வழக்கு தொடர்ந்தார்கள் 

குறித்த வழக்கானது அப்போதைய மேல் நீதிமன்ற நீதிபதி , ஏ.ஜி. அலெக்ஸ்ராஜா முன்னிலையில் விசாரணைகள் நடைபெற்றது. 

வழக்கு விசாரணையின் போது, மாகாண போக்குவரத்து அதிகார சபை தலைவர், இலங்கை போக்குவரத்துச் சபையின் வட பிராந்திய பிரதிப் பொது முகாமையாளர் ஆகியோர் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கோரிய நிவாரணத்திற்குத் தங்களுக்கு ஆட்சேபனை எதுவுமில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

தொடர்ந்தும் நடைபெற்ற வழக்கு விசாரணைகளை தொடர்ந்து, ஒருங்கிணைந்த நேர அட்டவணையை தயாரித்து அமல்படுத்தவும், அரை சொகுசுப் பேருந்துகள் சாதாரண சேவைகளைப் பாதிக்காதவாறு அட்டவணைப்படுத்தவும், நேரக் கண்காணிப்பாளர்களை நியமிக்கவும், அனுமதியற்ற பாதைகளில் இயங்கும் அரசுப் பேருந்துகளை முறைப்படுத்தவும் நீதிபதி அலெக்ஸ்ராஜா கடந்த மே மாதம் உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த 5 மாதங்கள். 

ஒருங்கிணைந்த நேர அட்டவணையை தயாரித்து சேவைகளை நடைமுறைப்படுத்த நீதிமன்று கடந்த மே மாதம் உத்தரவிட்ட நிலையில் , அவற்றினை ஒழுங்கமைத்து சேவைகளை கடந்த 27ஆம் திகதி நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்தே இ.போ.ச வினர் மற்றும் தனியார் பேருந்து சங்கத்தினர் சேவையில் ஈடுபட வேண்டும் என வடமாகாண போக்குவரத்து அதிகார சபை தலைவர் கடுமையான உத்தரவை பிறப்பித்ததுடன் , அன்றைய தினம் நான்காவது தடவையாக "மிக கோலாகலமாக" நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்து சேவைகள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது

வழமை போன்று , தனியார் பேருந்து சங்கத்தினர் நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்து சேவைகளை ஆரம்பித்த போதிலும் , இ.போ ச வினர் அங்கிருந்து சேவைகளை முன்னெடுக்காது வழமை போன்று மத்திய பேருந்து நிலையத்தில் இருந்தே சேவைகளை முன்னெடுத்தனர். 

 கடுமையான நடவடிக்கைக்கு ஆளுநர் பணிப்பு 

நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்து சேவைகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட  வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , இ.போ. ச வினர் வராதமையை அவதானித்து, "யாழ்ப்பாண நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு இப்பேருந்து நிலையம் முழுமையாகச் செயற்படுவது அவசியம். நெடுந்தூர போக்குவரத்துச் சேவைகளை வழங்கும் அனைத்துத் தரப்பினரும் நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்து தான் சேவைகளை முன்னெடுக்க வேண்டும் என கூறி ,, இதற்கு இணங்கிச் செயற்படாத தரப்புக்களுக்கு எதிராக உரிய பொறிமுறையின் கீழ் நடவடிக்கை எடுக்க வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவருக்கு பணித்தார். 

அதன் அடிப்படையில் , நீதிமன்ற கட்டளைக்கு கீழ் படியாது, நீதிமன்ற கட்டளையை உதாசீனப்படுத்தினார்கள்  என இலங்கை போக்குவரத்து சபையினருக்கு எதிராக வழக்கு தொடர வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினர் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் 

நெடுந்தூர பேருந்து நிலையத்திற்கு வர வேண்டிய அவசியம் இல்லை - இ.போ. ச 

நாம் நீதிமன்ற கட்டளையை அவமதிக்கவில்லை. இணைந்த சேவை நேர அட்டவணையின் கீழ் சேவைகளை முன்னெடுக்குமாறே எமக்கு நீதிமன்று கட்டளையிட்டுள்ளது. அந்த கட்டளையில் எந்த இடத்தில் இருந்து சேவைகளை ஆரம்பிக்க வேண்டும் என குறிப்பிடப்படவில்லை

இலங்கை போக்குவரத்து சபையினருக்கு என தனியாக பேருந்து நிலையம் இருக்கும் போது,  நாம் வேறு இடத்தில் இருந்து எமது சேவைகளை முன்னெடுக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை என யாழ்ப்பாண சாலை முகாமையாளர் பிரகலாதன் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளின் உறுதியான முடிவுகள் அவசியம் 

யாழ்ப்பாண நெடுந்தூர பேருந்து நிலையமானது தொடர்ந்து இயங்கும் பட்சத்தில் , யாழ்.நகர் மத்தியில் போக்குவரத்து நெரிசலால் அவதியுறும்  பொதுமக்களுக்கும், அவசர மருத்துவச் சேவைகளை பெற  போதனா வைத்திய சாலைக்கு வருவோருக்கும் , அங்கு தங்கி நின்று சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும் "பெரும் நிம்மதி" ஏற்படும்.

அதிகாரிகளின் உறுதியான நிர்வாக முடிவுகளும், சட்டத்தின் முறையான அமலாக்கமும் தொடரும் பட்சத்தில் மட்டுமே இந்த நெடுந்தூரப் பேருந்து நிலையம் மீண்டும் மூடப்படாமல் தொடர்ச்சியாகச் செயற்பட முடியும்.

தனிநபர்களின் மற்றும் தொழிற்சங்கங்களின் நலன்களை விடப் பொதுமக்களின் பாதுகாப்பும், வசதியும், நகரத்தின் எதிர்கால வளர்ச்சியுமே முதன்மையானது என்பதை உணர்ந்து அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து செயலாற்றுவதே இப் பிரச்சினைக்கு நிலையான தீர்வாக அமையும். 

No comments