Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இன்னும் பல ஆண்டுகள் நம்மோடு களத்தில் இருக்க வேண்டியவர் சிவாஜிலிங்கம்: இறுதி நிகழ்வில் தொல். திருமாவளவன் உருக்கம்


சிவாஜிலிங்கம் இன்னும் பல ஆண்டுகள் நம்மோடு களத்தில் இருக்க வேண்டியவர், இன்று நம்மோடு இல்லை என்பது பெரும் துயரம் அளிக்கிறது அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாதது. தனிப்பட்ட முறையிலே எனக்கு நேர்ந்த ஒரு பேரிழப்பாக நான் உணர்கிறேன் என இந்திய மக்களவை உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாளவன் தெரிவித்துள்ளார். 

வல்வெட்டித்துறையில் நடைபெற்ற சிவாஜிலிங்கத்தின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில்

மறைந்த சிவாஜிலிங்கத்திற்கு,  தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாகவும் எமது செம்மாந்த வீர வணக்கத்தைச் செலுத்துகிறேன். 

புதுதில்லியில் இருந்தபோது இந்த தகவல் கிடைத்தது. மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன். நேரில் அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதற்காகவே, சென்னைக்கு வந்து, விமானம் மூலம் இங்கே வந்து அண்ணனுடைய திருவுடலுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறேன்.  

கடந்த 2002-ஆம் ஆண்டிலிருந்து எனக்கு நன்கு பழக்கமானவர். ஏறத்தாழ 24 வருட பழக்கம். 

மானுடத்தின் தமிழ் கூடல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 2002ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து நாங்கள் ஐந்து பேர் அழைக்கப்பட்டிருந்தோம். அப்போது சுமார் ஐந்து நாட்கள் இங்கே தங்கியிருந்தோம். ஐந்து நாட்களும் எங்களோடு இருந்தவர் சிவாஜிலிங்கம்

அப்போது ஈழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் எப்படி தொடங்கியது? அதற்கு முன்பான, அறவழியில் எப்படி கால் நூற்றாண்டு காலம் போராட்டம் நீடித்தது? போன்ற அனைத்தையும் ஒரு வரலாற்றுப் பேராசிரியரைப் போல எங்களுக்கு வகுப்பு எடுத்தார் 

ஒவ்வொரு காலகட்டத்தில் யார் யார் ஜனாதிபதிகளாக இருந்தார்களோ, அந்த காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் என்ன? அவற்றை எல்லாம் எப்படி இந்த அரசு மீறி இருக்கின்றன? ஏன் ஆயுதம் எடுக்க வேண்டிய தேவை வந்தது? போராளிகளுக்கு இடையே இருந்த முரண்பாடுகள் என்ன?  பிரபாகரன் எப்படி இந்த போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கிறார்? போன்ற அனைத்தையும்  எங்களுக்கு சொல்லிக் கொண்டே வந்தார்.  

சிவாஜிலிங்கம் என்றைக்கு தமிழ்நாட்டுக்கு வந்தாலும், எத்தனை நாட்கள் தங்கியிருந்தாலும், உடனே திரும்புவதாக இருந்தாலும், என்னை கட்டாயம் தொடர்பு கொள்வார், நேரிலே சந்திப்பார். நான் இருக்கும் இடம் எங்கே என்று தேடி வந்து என்னை சந்தித்து வெகுநேரம் உரையாடுவார். 

தமிழ்நாட்டு அரசியலை மிகச் சரியாக புரிந்து வைத்து, அதன்படி எல்லா இயக்கங்களின் தலைவர்களுமோடு நல்லிணக்கமான ஒரு நட்புறவைப் பேணி வந்தார். யாரிடமும் அவருக்கு எந்த கசப்பும் இல்லை.  

அதேபோல டெல்லிக்கு செல்வதாக இருந்தாலும், அங்கே ஆட்சிகள் மாறினாலும், அவர்களோடு எப்படி உறவைப் பேணிப்பது, புதுப்பித்துக் கொள்வது என்கிற அந்த உத்தியும், அரசியல் உத்தியும் அவருக்கு மிக நன்றாகத் தெரிந்திருந்தது. 

ஒரு பெரிய ஆளுமையை நாம் இன்றைக்கு இழந்திருக்கிறோம்.

எவ்வளவுப் போர் குணம் இருந்தாலும், கருத்தியல் கொள்கைக் கோட்பாடு அடிப்படையில் சிந்திக்கிற ஆளுமைகள் அவசியம்.

 ஆயுதம் ஏந்தி போராடுகிற வலிமை நமக்கு ஒருபுறம் இருந்தாலும் கூட, அந்த போராட்டத்தை நீர்த்துப் போகாமல் பாதுகாக்கிற வலிமை, காலச் சூழலுக்கு ஏற்ப உத்திகளை மாற்றுகிற ஆற்றல், அதே நேரத்தில் நமது இலக்கை தவறவிடாமல் முன்னோக்கிச் செல்கிற அந்தப் புரிதல் கருத்தியல் புரிதலில் இருந்துதான் உருவாக முடியும். 

சிவாஜிலிங்கம் செய்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது. கொள்கையில் ஒருபோதும் அவர் நீர்த்துப் போனதில்லை. சமரசம் செய்து கொண்டதில்லை. எந்த காரணத்திற்காகப் பின்வாங்கியதில்லை. 

நான் பார்க்கும்போதெல்லாம் உடல்நலம் குறித்து  பேசுவதுண்டு. அப்போதே அவருக்கு சர்க்கரை நோய் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. 

ஒவ்வொரு முறையும் நீங்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்று உடல் நலத்தை தேற்றுங்கள் என நான் கெஞ்சி கேட்பதுண்டு. ஆனால் அவர், அவற்றுக்கெல்லாம் முன்னுரிமை தருவதில்லை. பார்த்துக்கொள்ளலாம், நமக்கு இதுவா முக்கியம் என்று அதை பின்நோக்கி தள்ளிவிட்டு, தன்னுடைய கொள்கை நிலைப்பாடுகளை முன்னோக்கிப் பாய்ந்தவர்.

 உடல்நலம் அண்மையிலே பாதிக்கப்பட்டு சென்னையில் மருத்துவமனையில் இருந்தபோது, அவரை மருத்துவமனைக்குச் சென்று சந்தித்தேன். நீண்ட நேரம் அவரோடு இருந்து உரையாடினேன். அப்போதும் அவர் உடல்நலத்தைப் பற்றி பெரிதாக கவலைப்படவில்லை.  

தமிழ்நாட்டு அரசியல், இந்திய தேசிய அளவிலான அரசியல், உலகம் தழுவிய அளவில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் நிலைமைகள் போன்றவற்றைப் பற்றித்தான் எங்களோடு உரையாடிக் கொண்டிருந்தார். 

 அவருடைய உடல்நலம் சற்று பாதிக்கப்பட்ட நிலையில் தான் இருந்தது. அதை அவர் பொருட்படுத்தவில்லை. இன்னும் பல ஆண்டுகள் நம்மோடு இருக்க வேண்டியவர், சில பத்தாண்டுகள் நம்மோடு களத்தில் இருக்க வேண்டியவர், இன்று நம்மோடு இல்லை என்பது பெரும் துயரம் அளிக்கிறது.  

அடுத்தடுத்து இளைய தலைமுறையினர் அரசியலை கையில் எடுத்துக் கொள்வார்கள் என்றாலும் கூட, அண்ணன் சிவாஜிலிங்கம் போன்ற கருத்தியல் ஆளுமைகள் அடுத்த தலைமுறையினருக்கு கட்டாயம் தேவை. 

அவர் இல்லை என்பது ஒரு வெற்றிடமாக இன்றைக்கு மாறியிருக்கிறது. அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாதது.

 தனிப்பட்ட முறையிலே எனக்கு நேர்ந்த ஒரு பேரிழப்பாக நான் உணர்கிறேன். ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து நான் ஏதேனும் விவாதிக்க வேண்டும், கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற போது, எதிர்பாராத வகையிலேயே எனக்கு தொடர்புக்கு வருவார். 

அவற்றை எல்லாம் நான் எண்ணிப் பார்க்கிறேன். அவருடைய இழப்பு தனிப்பட்ட முறையிலே எனக்கு நேர்ந்த இழப்பாக கருதுகிறேன். பெரும் துயரத்தோடு அவருக்கு எனது செம்மாந்த வீர வணக்கத்தைச் செலுத்தி முடிக்கிறேன் என்றார் 

No comments