Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சி.வியின் கையில் இன அழிப்பு ஆயுதம்?



நாடாளுமன்ற தேர்தலில் இனஅழிப்பு விவகாரத்தை சி.வி.விக்கினேஸ்வரனின் தரப்பு தனது தேர்தல் பிரச்சாரத்தின் மையப்பொருளாக முன்னிறுத்தி காய்நகர்த்த தொடங்கியுள்ளது.

வடமாகாணசபையில் தனது முதலமைச்சர் பதவிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட இனஅழிப்பு தீர்மானத்தை சாதனையாக சி.வி.விக்கினேஸ்வரன் அனைத்து தரப்புக்களிடமும் சிலாகித்தே வருகின்றார்.

உண்மையில் அது பற்றி வாய் திறந்தால் வெள்ளை வானும் ஆயுததாரிகளும் வீடு தேடிவரும் காலப்பகுதியில் அத்தீர்மானம் வடக்கு மக்களது ஒருமித்த கருத்தாக சர்வதேசத்தினால் பார்க்கப்பட்டிருந்தது.

முதலமைச்சர் தொடர்பில் ஆரம்ப காலங்களில் கண்டுகொள்ளா மனோநிலையிலிருந்த உணர்வாளர்கள் பலரும் இனஅழிப்பு தீர்மானம் மற்றும் அதனை ஜநாவரை எடுத்து சென்று சேர்த்தமை தொடர்பில் பாராட்டுக்களையும் ஆதரவையும் அள்ளி வழங்க தவறவில்லை.

இந்நிலையில் தனது தேர்தல் பிரச்சார துருப்பு சீட்டாக அதனை முன்னாள் முதலமைச்சர் தரப்பு முன்னிறுத்தி பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளது.

நடந்தது இனஅழிப்பில்லை , அதற்கு சான்றுகள் போதாதென கூட்டமைப்பின் பேச்சாளர் வாதிட்டு வர ஏனைய அவரது பங்காளிகளோ திருட்டு மௌனத்தையே கடைப்பிடித்து வருகின்றனர்.

உண்மையில் கூட்டமைப்பின் தலைவர்கள் எவரது வாயிலிருந்தும் இன்று வரை நடந்தது, நடப்பது இனஅழிப்பு என்ற வார்த்தை தப்பி தவறி கூட வெளியே வந்திருக்கவில்லை.

இன்னொருபுறம் கொழும்பிலுள்ள சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய தர்மசங்கடத்திலுள்ள தரப்புக்களும் இதனை மௌனமாக கடந்தே செல்ல முற்பட்டுள்ளன.

நாடாளுமன்ற தேர்தலின் பின்னராக மோசமான நெருக்குவாரங்களை தமிழ் மக்கள் எதிர்கொள்ள போகின்றனர்.
வாயினுள் புட்டுக்கட்டிகளுடன் கடந்த பத்துவருடங்கள் இருந்து பங்களா,பல சொகுசு வாகனங்கள் என குடும்பம் குட்டிகளென நாடாளுமன்ற தமிழ் தலைமைகள் கரைசேர்ந்துள்ள நிலையில் குடும்பங்குட்டிகள் என்ற பொறிகளற்ற , உழைப்பதற்கு தேவையேதுமற்ற ஒருவன் என்ற சி.வி.விக்கினேஸ்வரனின் மனத்திறந்து பேச்சு சாதாரண மக்களை ஈர்த்தேயிருக்கின்றது.

இந்நிலையில் நடந்தது,நடப்பது,நடக்கப்போவது இன அழிப்பே என்ற சி.வி.விக்கினேஸ்வரனின் தரப்பு பிரச்சாரம் அனைத்து தரப்பினதும் கவனத்தை ஈர்த்தேயுள்ளது.

No comments