பிலிப்பைன்ஸின் பிரபல ஊடகவியலாளர் மரியா ரேஸா, இணையவழி அவதூறு வழக்கில் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் இன்றுதீர்ப்பளித்துள்ளது.
56 வயதான மரியா ரேஸா, பிலிப்பைன்ஸ் ரெப்ளர் செய்தி இணையத்தள நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் ஆவார்.
ரெப்ளர் தளத்தின் முன்னாள் எழுத்தாளர் ஒருவரும் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனினும் 6 வருட சிறைத்தண்டனையை எதிர்நோக்குகின்றனர்.
வர்த்தகர் ஒருவருக்கும் முன்னாள் நீதிபதி ஒருவருக்கும் இடையிலான தொடர்பு குறித்து 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கட்டுரையொன்று தொடர்பாகவே இவ்வழக்கு நடைபெற்றது.
ரெப்ளர் இணையத்தளத்தில் கட்டுரை வெளியாகி 4 மாதங்களின் பின்னரே 2012 செப்டெம்பரில் குறித்த சட்டம் அமுலுக்கு வந்தது. ஆனால், அதில் எழுத்துப்பிழை தொடர்பான திருத்தமொன்று 2014 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டமையால், குறித்த சட்டத்துக்குள் இக்கட்டுரை உட்படுவதாக வழக்குத்தொடுநர்கள் வாதாடினர்.
தன் மீதான குற்ச்சாட்டை நிராகரித்துள்ள மரியா ரேஸா, இக்குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கமுடையவை எனத் தெரிவித்துள்ளார். இத்தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இவ்வழக்கானது ஜனாதிபதி ரொட்றிகோ டுடேர்டேவை விமர்சிப்பவர்களை மௌனமாக்குவதை நோக்காகக் கொண்டது என ஊடகச் சுதந்திரத்துக்காக குரல் கொடுப்பவர்கள் கூறுகின்றனர்.









No comments