மல்லாகத்தில் வைத்து கனி குழு எனும் வன்முறை கும்பலை சேர்ந்த சந்தேக நபர்கள் ஐவரும் நேற்று புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து வாள்கள் இரண்டு, கைக்கோடரி ஒன்று, மோட்டார் சைக்கிள்கள் இரண்டு மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் கைப்பற்றப்பட்டன.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் மல்லாகத்தை சேர்ந்த பொன்னம்பலம் பிரகாஸ் எனும் சுற்றுச்சூழல் அதிகார சபை உத்தியோகத்தர் மீதே நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது.
அந்த உத்தியோகத்தர் வழமை போன்று காலை கடமைக்காக வந்த போது, அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் வந்த நால்வர் மாவட்ட செயலக வாயிலுக்கு அருகில் வழி மறித்து அவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
தாக்குதலில் கையில் வாள் வெட்டு காயத்திற்கு இலக்கான உத்தியோகத்தர் பாதுகாப்பு தேடி மாவட்ட செயலகத்தினுள் ஓடியுள்ளார். அதன் போதும் , இருவர் அவரை பின் தொடர்ந்து மாவட்ட செயலக வளாகத்தினுள் புகுந்தும் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.
தாக்குதலுக்கு இலக்கான உத்தியோகத்தர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட செயலகத்தில் , தெரிவத்தாட்சி அலுவலகமும் செயற்பட்டு வருகின்றது. வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து மாவட்ட செயலகம் தெரிவத்தாட்சி அலுவலகம் எனும் ரீதியில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையிலையே பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உள்ள மாவட்ட செயலக வாயிலுக்கு அருகில் வன்முறை கும்பல் மோட்டர் சைக்கிள் வந்து வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.









No comments