தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பதவிகளில் இருந்து சட்டத்தரணி வி. மணிவண்ணன் நீக்கப்பட்டார் எனும் செய்திகள் வெளிவந்து 24 மணித்தியாலங்களுக்கு மேல் கடந்த நிலையிலும் கட்சியின் தலைவர், செயலாளர் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றார்கள்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழு நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு சூம் செயலி ஊடாக கூடியது. அது தொடர்பில் தேசிய அமைப்பாளரான சட்டத்தரணி.வி மணிவண்ணனுக்கு அறிவிக்கப்படாமல் மாவட்ட அமைப்பாளர்கள் , தலைவர் , செயலாளர் கூடி இருந்தனர்.
மணிவண்ணன் இல்லாத கூட்டத்தில் அவர் மீதான குற்றசாட்டுக்களை முன் வைப்பது சரியில்லை,எனவே நேரில் கூட்டத்தை கூட்டுவோம் என இரு அமைப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதற்கு ஏனையவர்கள் உடன்படாத காரணத்தால் அவர்கள் இருவரும் வெளியேறினார்கள். அதனை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தை அடுத்து மணிவண்ணனின் பதவிகளை பறிப்பது எனவும் அவர் விரும்பின் அடிப்படை உறுப்பினராக தொடர்ந்து இருக்க அனுமதிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
வியாழக்கிழமை இரவு எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பான செய்திகள் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் இணையத்தளங்கள் , சமூக ஊடகங்களில் வெளிவர தொடங்கின.
அது தொடர்பில் ஊடகங்கள் மணிவண்ணனிடம் கேட்ட போது , தமக்கு அது தொடர்பில் தலைமையினால் எதுவும் அறிவிக்கப்படவில்லை எனவும், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தனக்கு கட்சியினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் தலைமைக்கு தெரிவித்ததாவும் அதன் பின்னணியில் இச் சம்பவம் தொடர்பில் நடைபெற்று இருப்பதாகவும் ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டேன் என தெரிவித்தார். அத்துடன் இது தொடர்பில் தான் கட்சியுடன் பேசவுள்ளதாகவும் அதுவரையில் ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் கூறினார்.
அதேவேளை குறித்த செய்திகள் வெளியானதை தொடர்ந்து கட்சியின் தலைவர் செயலாளரை ஊடகவியலாளர்கள் பல தடவைகள் தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.
மணிவண்ணன் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டார் என வெளியான செய்திகள் தொடர்பில் தலைவர் செயலாளர் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றனர்.
கட்சியின் தீர்மானம் தொடர்பில் வெளிப்படையாக அறிவிக்க முடியாத நிலையிலும் மணிவண்ணன் மீதான குற்றசாட்டுக்கள் தொடர்பிலும் பகிரங்கமாக அறிவிக்காது தலைவர் செயலாளர் உள்ளமை அவர்களின் ஆளுமையில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக பலரும் கூறி வருகின்றனர்.









No comments